காவல்துறையின் சரிபார்ப்புக்கு பின்னரே சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு நிறுவனங்கள் சிம் கார்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல சிம் கார்டுகளை வைத்து கொண்டு சிலர் சட்ட விரோத செயல்களை செய்து வருவதால், மோசடிகளை தடுக்கும் வகையில் காவல்துறை சரிபார்ப்பு கட்டமாயமாக்கப்படுவதாக தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.


சிம்கார்டு விற்பனையாளர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்:


இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், "இனி, ​காவல்துறை சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு ​புதிய விற்பனையாளர்கள் (மொபைல் சிம் கார்டுகளின்) செல்ல வேண்டியது கட்டாயம். அனைத்து சிம் கார்டு விற்பனையாளர்களும் பதிவு செய்வதும் கட்டாயமாகிறது.


விதிகளை மீறுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சஞ்சார் சாதி போர்ட்டல் தொடங்கப்பட்டதில் இருந்து, மோசடியாகப் பெறப்பட்ட 52 லட்சம் சிம் கார்டு இணைப்புகளை அரசாங்கம் கண்டறிந்து செயலிழக்கச் செய்தது. மொபைல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள 67,000 டீலர்களுக்கு அரசாங்கம் தடைபட்டியலில் சேர்த்துள்ளது.


விதியை மீறும் விற்பனையாளர்களுக்கு அபராதம்:


கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம் முதல் 300 சிம் கார்டு டீலர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மக்கள் (மொபைல்) சிம் கார்டுகளை மொத்தமாக வாங்கினர். சிம் கார்டுகளை மொத்தமாக வாங்கும் விதிமுறை இருந்தது. எனினும், இந்த விதியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதற்குப் பதிலாக, முறையான வணிக இணைப்பு வசதியை நாங்கள் கொண்டு வருவோம். இது மோசடி அழைப்புகளை நிறுத்த உதவும். 10 லட்சம் சிம் டீலர்கள் உள்ளனர். அவர்களுக்கு போலீஸ் சரிபார்ப்புக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும். தொலைத்தொடர்புத் துறையும் மொத்த இணைப்புகளை வழங்குவதை நிறுத்தியுள்ளது. வணிக இணைப்புக்காக மொத்தமாக சிம் வாங்குவதற்கு புதிய விழிமுறை கொண்டு வரப்படும்.


வணிக இணைப்புக்காக மொத்தமாக சிம்  கார்டு வாங்கும்போது, வணிக அமைப்புக்கு பதில் இனி தனி நபர் அடையாள சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்" என்றார்.


போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கும் போக்கு:


இந்த ஆண்டு மே மாதம், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 1.8 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளை பஞ்சாப் காவல்துறை முடக்கியது. மேலும் அத்தகைய சிம் கார்டுகளை வழங்கியதற்காக 17 பேரைக் கைது செய்தது.


பஞ்சாப் காவல்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு, தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து போலி ஐடிகளைப் பயன்படுத்தி சிம் கார்டுகளை விற்பதில் ஈடுபட்டுள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.