செல்வமுரளி என்பவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் அவர், அக்ரிசக்தி என்ற விவசாயம் சார்ந்த வார இதழ், ஆன்லைன் தளம் மற்றும் செயலியை உருவாக்கி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடத்தி வருகிறார்.


100 பேரை தேர்வு செய்த கூகுள்:


இந்நிலையில், கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு  கிராமப்புறங்களை சேர்ந்த ஆப் உருவாக்குபவர்களை தேர்வு செய்தது. பின்னர் 100 பேருக்கும் மென்பொருள் சார்ந்த பயிற்சியும் வழங்கியது. அந்த 100 பேரில் செல்வமுரளியும் இருந்துள்ளார். 


கடந்த வாரம், செல்வமுரளிக்கு டெல்லியில் இருந்து முக்கிய பிரமுகர் உங்களை தொழில்நுட்ப ரீதியாக சந்திக்க வேண்டும் என தெரிவித்ததாக அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து, செல்வமுரளி டெல்லி சென்றுள்ளார். அங்கு சென்றபோது, சுந்தர் பிச்சை இருந்துள்ளார். அதை பார்த்த செல்வமுரளிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 


சுந்தர் பிச்சையுடன் சந்திப்பு:


அங்கிருந்த சுந்தர் பிச்சை செல்வமுரளிக்கு கை கொடுத்து, ஹாய் சொல்லியுள்ளார். இந்த நிகழ்வை சற்றும் எதிர்பாராத செல்வமுரளிக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல் திகைத்துள்ளார். 


செல்வமுரளி படபடப்புடன் இருப்பதை அறிந்த சுந்தர் பிச்சை, அவரை தட்டி கொடுத்து இயல்பாக்கி உள்ளார். பின்னர், செல்வமுரளி, அவர் குறித்து தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, செல்வமுரளி உருவாக்கிய அக்ரி சக்தி ஆப் குறித்து விளக்குமாறு சுந்தர் பிச்சை கேட்டு கொண்டதையடுத்து, அவர் விளக்கியுள்ளார்.


மேலும், இந்தியாவில் தொழில் நுட்பத்திற்கான தேவை எங்கு எல்லாம் உள்ளது? ஆப் உருவாக்கும் போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து சுந்தர் பிச்சை கேட்டுள்ளார்.


பரிந்துரை:


தொடர்ந்து செல்வமுரளியிடம் இந்தியாவிலுள்ள பல மொழிகளிலும் ஆப்-பயன்பாட்டை விரிவாக்குமாறும், அப்போதுதான், இதன் பயன்பாடு அனைவருக்கும் சென்று சேரும் என சுந்தர் பிச்சை பரிந்துரை செய்துள்ளார். அதற்கு போதிய நிதி தேவை என்று செல்வமுரளி தெரிவிக்க, கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்தி செலவை குறைத்து கொள்ளுங்கள் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.




இருவருக்கும் இடையிலான உரையாடல், சுமார் 16 நிமிடங்கள் வரை நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தமிழர்கள் என்பதால், தமிழிலே உரையாடியுள்ளனர்.


இது குறித்து செல்வமுரளி கூறுகையில், விவசாயத்திற்கு என்ன தேவை? விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவை எங்கு பயன்படுத்தலாம் என்பது தொடர்பான சுந்தர் பிச்சையுடனான உரையாடல், மிகவும் சிறப்பானதாக அமைந்தது என்றார். 


ஒரு சாதாரண தமிழரை, உலகத்தின் தலை சிறந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வான சுந்தர் பிச்சை நேரில் அழைத்து பேசி, அவரது திறமைக்கு ஊக்கமளித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.