கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர்.  இந்நிலையில் பெருவழிப்பாதையில் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக 500 சிறப்பு பாஸ்கள் வழங்கப்படுமென திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Continues below advertisement

இதுவரை இல்லாத வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், முன்பதிவு செய்யாமல் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது. தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டதை தொடர்ந்து ஸ்பாட் புக்கிங் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Continues below advertisement

தற்போது கூட்ட நெரிசல் குறைந்து இருக்கும் நிலையில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெருவழிப்பாதை  யாத்திரை மேற்கொண்டு வருகிற பக்தர்களுக்காக  அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தினமும் 500 ஸ்பாட் புக்கிங் கூப்பன் வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் அறிவித்துள்ளார். பக்தர்கள் அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள் வழியாக பயணிக்கக் கூடாது என்றும், அவ்வழிகளில் யாரும் செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், முக்குழி பகுதியில் தினமும் 500 பேருக்கு வழங்கப்படும் இந்த ஸ்பாட் புக்கிங் கூப்பனைப் பெறுபவர்கள், பம்பை வழியாக சன்னிதானத்தை அடைய வேண்டும் என்றார்.

குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் அன்னதானமாக கேரள பாரம்பரிய உணவான சத்யா பரிமாறப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரி மலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் மதிய அன்னதானமாக புலாவ், சம்பார் சாதம் ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், மலையேறி வரும் பக்தர்கள் நிறைவாக சாப்பிடும் வகையில் பருப்பு , சாம்பார், அவியல், பொரியல், ஊறுகாய், பாயசம், அப்பளம் உள்ளிட்டவை அடங்கிய கேரள சத்யா பரிமாற தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது .சுற்றுச்சூழல், வாழை இலை கழிவுகளை உண்ண யானைகள் வருவது உள்ளிட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டு ஸ்டீல் பாத்திரங்களில் உணவு பரிமாற முடிவு செய்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேவசம் போர்டுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடையை பயன்படுத்தி இந்த அன்னதானத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.