பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

Continues below advertisement

கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை மூன்று மாதங்கள் சபரிமலை சீசன் என்பதால் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஜோதியை காணவும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் தனியார் வாகனங்கள் மூலம் வருகை புரிகின்றனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் பல்வேறு போக்குவரத்து வசதிகள் இருந்தும் சபரிமலையில் விமான நிலையம் இல்லாததால், இங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Continues below advertisement

குறிப்பாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், தங்களது இருமுடியை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். "இருமுடியின் மீது பக்தர்கள் கொண்டுள்ள ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டு, விமானத்தில் இரு முடியை கொண்டு செல்ல அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

விமானத்தில் செல்பவர்கள் 100 மி.லி-க்கு மேல் திரவப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது கிடையாது. அதாவது இந்த பொருட்கள் லக்கேஜ் பிரிவில் வரவேண்டும். கையில் எடுத்துச் செல்லப்படும் திரவப் பொருட்கள் 100 மி.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லும் இருமுடியில் நெய் தேங்காய் இடம் பெற்று இருக்கும். இதில் உள்ள நெய் 100 கிராமுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கையில் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால், இருமுடியை பதிவு செய்யப்பட்ட உடமையாக லக்கேஜ் கொண்டு செல்ல முடியும். இந்நிலையில் தற்போது கையில் கொண்டு செல்ல மத்திய அமைச்சர் அனுமதி வழங்கியிருக்கிறார்.