வெளிநாட்டில் இருந்து நூதன முறையில் தங்கம் கடந்தி வந்த நபர், ஐதராபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 21 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.


தங்கம் கடத்தல்:


ஞாயிற்றுக்கிழமை அன்று துபாயில் இருந்து விமானம் ஒன்று வழக்கம்போல் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, ஒருவர் கொண்டு வந்த டிராலி பெட்டியை ஸ்கேன் செய்தபோது, வேறு ஏதோ ஒரு உலோகம் அதில் மறைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.






ஸ்க்ரூ, கம்பியாக மாற்றப்பட்ட தங்கம்:


இதையடுத்து பெட்டியை எடுத்துச்சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் முடிவில் தங்கத்தை சிறிய ஸ்க்ரூ மற்றும் கம்பியாக மாற்றி அதனை அந்த பெட்டியோடு பெட்டியாக மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. பின்பு பெட்டியில் இருந்த தங்கம் ஒவ்வொன்றாக கண்டெடுக்கப்பட்டது. அதன்படி மொத்தம் 64 ஸ்க்ரூக்கள் மற்றும் 16 சிறிய கம்பிகள் மீட்கப்பட்டன. அதன் மொத்த எடை 455 கிராம் எனவும், இந்திய சந்தையில் அதன் மதிப்பு 21 லட்சத்து 20 ஆயிரத்து 180 ரூபாய் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, பெட்டியில் தங்கம் கடந்தி வந்த நபரையும் கைது செய்துள்ளனர். 


தொடரும் தங்க கடத்தல்:


முன்னதாக கடந்த வாரம் ஐதராபாத் விமான நிலைய சுங்கத்துறையினர் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான, 807.10 கிராம் எடையுள்ள 12 தங்கக் கட்டிகள் மற்றும் தங்கச் சங்கிலியை கைப்பற்றினர். கடந்த செவ்வாயன்று தோஹாவில் இருந்து காலை 08.45 மணிக்கு தரையிறங்கிய விமானத்தில் வந்த ஆண் பயணிகளை சோதனையிட்டதில் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.


அதனடிப்படையில் அவரது உடைமைகளை சோதனையிட்டதில், 12 வெட்டப்பட்ட தங்கக் கட்டிகள் மற்றும் 1 தங்கச் சங்கிலி என மொத்தம் 49 லட்சத்து 71 ஆயிரத்து 736 மதிப்புள்ள 807.10 கிராம் எடையுள்ள நகைகள், சார்ஜ் செய்யக்கூடிய டார்ச் லைட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கம் கடத்தி வந்த நபரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.