அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை, ஹெலிகாப்டரில் பயணிக்கும்போது படம்பிடித்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ளார்.


ஃபட்னாவிஸ் வெளியிட்ட வீடியோ:


இதுதொடர்பாக தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், ”அயோத்தியில் பிரபு ஸ்ரீராமர் கோயில் கட்டும் பணி இப்படித்தான் நடந்து வருகிறது. லக்னோவில் இருந்து அயோத்தி செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் பயணித்தபோது எடுக்கப்பட்ட ஏரியல் காட்சி. ஜெய் ஸ்ரீ ராம்” என குறிப்பிட்டுள்ளார். நாலாபுறமும் பிரமாண்ட கிரேன்கள் நிறுத்தப்பட்டு, விறுவிறுப்பாக கட்டப்பட்டு வரும் அயோத்தி கோயில் காட்சிகள் உடன் ராமர் தொடர்பான பாடல் ஒன்றையும் இணைத்து தேவேந்திர பட்னாவிஸ் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.






உத்தரபிரதேசம் சென்ற மகாராஷ்டிரா முதலமைச்சர்:


மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உடன் சேர்ந்து ஒருநாள் பயணமாக தேவேந்திர பட்னாவிஸ் நேற்று லக்னோ சென்று இருந்தார். அங்கிருந்து மீண்டு மகாராஷ்டிரா திரும்பும்போது அவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். வரும் ஜனவரி மாதம் இந்த கோயிலில் வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராமர் கோயில் சிறப்பம்சங்கள்:


ராமர் கோயில் காட்டப்படும் இடம் சாகேத் ராமரின் பிறந்த இடமாக கருதப்படுகிறது. இது இந்தியாவின் பண்டைய நகரம் மற்றும் இந்துக்களின் 7 புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  இந்து நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு இந்த கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  வலிமை மற்றும் நீண்ட ஆயுளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானில் உள்ள பன்சி மலைகளில் இருந்து வரும் கற்கள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.  பிரதான அமைப்பைச் சுற்றி 4 சிறிய கோயில்கள் எழுப்படவுள்ளன. அஸ்திவாரத்தை அமைப்பதற்காக 'ஸ்ரீ ராம்' என்று பொறிக்கப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.  3 தளங்கள், 1 ஷிகர் மற்றும் 5 குவிமாடம் வடிவ மண்டபங்களுடன் மிகவும் பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகிறது.  முதலில் உயரம் 141 அடியாக நிர்ணயிக்கப்பட்டு பின்னர் 161 அடியாக உயரம் அதிகரிக்கப்பட்டது.  கோயில் அமைக்கப்பட உள்ள பீடத்திற்காக, சமீபத்தில், 17,000 கிரானைட் கற்கள் பரத்பூரின் பன்சி பஹத்பூர் பகுதியில் இருந்து அயோத்யா வந்தடைந்தன. ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 29 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 இல் அயோத்தி திரும்பினார்.