கோவாலில் உள்ள பிரபல ‘கர்லீஸ்’ உணவகம் (Curlies’ restaurant) சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதற்காக இடிக்கப்பட்டுள்ளது.


கோவா கடற்கரையில் உள்ள இந்த உணவகத்தில்  நடிகையும், பா.ஜ.க. தலைவருமான சோனாலி போகட் (Sonali Phogat)-க்கு உணவில்  போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்ட விவகாரம் ஆனது. இதில் சோனாலி போகட் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், அவர் உடலில் காயங்கள் இருந்ததாக தெரியவந்தது. 


தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) அளித்த உத்தரவின்படி,  கோவா கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் தீர்பான கர்லீஸ்’ உணவகத்தை இடிக்கும் உத்தரவை உறுதி செய்தது.






ஏற்கனவே, கர்லீஸ் உணவகத்தில்  நைட் கிளப் மற்றும் மது விருந்து உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த உண்வகத்தின் உரிமையாளர்களான எட்வின்ஸ் நியூன்ஸ் ( Edwin Nunes) மற்றும் லினர்ட் நியூன்ஸ் (Linet Nunes)- க்கு எவ்வித வணிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என  கோவா கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


வியாழன் அன்று, உள்ளூர் நீதிமன்றம் கர்லீஸ் உணவகத்தின் உரிமையாளர் எட்வின் நியூன்ஸ் மற்றும் லினர்ட் நியூன்ஸ் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. எட்வின் நூன்ஸின் வழக்கறிஞர் கமலகாந்த் பவுலேகர், நூன்ஸ் கர்லியைப் பார்க்க முடியாது என்றும், கோவாவை விட்டு வெளியேறுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறினார். இதற்கிடையில், ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் பாஜக அரசியல்வாதி சோனாலி போகட் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கோவா காவல்துறை ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களுக்குச் சென்று விசாரணை செய்தனர்.


“மறைந்த நடிகை சோனாலி போகட் சகோதரர் ரிங்கு அளித்த புகாரின்படி, சொத்து மற்றும் பிற பிரச்சினைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்படி அணிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று சோதனையிட்டனர்.  எங்கள் குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று, உள்ளூரில் கிடைக்கும் சாட்சிகளும் பேசி, இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முயற்சிகளுக்கு இது உதவும் ,” என்று கோவா காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஜஸ்பால் சிங் தெரிவித்தார்.






கடந்த ஆகஸ்ட் 23 அன்று வடக்கு கோவாவில் உள்ள அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனையில் சோனாலி போகத் இறந்துவிட்டதாக செய்தி வெளியானது. . பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் நிறைய காயம் இருப்பது தெரியவந்தது, அதைத் தொடர்ந்து கோவா போலீசார் கொலை வழக்கை பதிவு செய்தனர்.


கோவா காவல்துறை ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் சாந்த் நகரில் உள்ள சோனாலியின் இல்லத்திற்குச் சென்று மூன்று டைரிகளைக் கைப்பற்றியது. சோனாலியின் படுக்கையறை, அலமாரி மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாக்கப்பட்ட லாக்கர் ஆகியவற்றை போலீஸ் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், சோனாலி போகட் வீட்டில் இருந்த லாக்கருக்கும் போலீசார் சீல் வைத்தனர். ஒரு கிளப்பில் நடைபெற்ற பார்ட்டியின்  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சோனாலியின் இரண்டு உதவியாளர்களை கைது செய்துள்ளனர். 


சோனாலி போகட்டின் மரணம் தொடர்பாக கோவா காவல்துறையின் விசாரணையில் அதிருப்தி தெரிவித்த அவரது குடும்பத்தினர், இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையைக் கோரி கோவா உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளனர்.


இந்த வழக்கு தொடர்பாக சோனாலி போகட்டின் குடும்பத்தினர் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். எனினும், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் அதிருப்தி அடைந்த குடும்பத்தினர், கோவா உயர் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ANI-யிடம் பேசிய சோனாலி போகத்தின் உறவினர் மற்றும் வழக்கறிஞருமான விகாஸ் சிங்,  இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு சிபிஐ விசாரணை கோரி கடிதம் எழுதியுள்ளோம் என்றும், வெள்ளிக்கிழமைக்குள் கோவா உயர் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் கூறினார். உச்ச நீதிமன்றத்தின் பதிலில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.


முன்னதாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சோனாலி போகத்தின் இரண்டு உதவியாளர்கள்  சோனாலிக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்ததாக கோவா காவல்துறை கூறியிருக்கிறது.


தனது டிக்டாக் வீடியோக்களால் புகழ் பெற்ற சோனாலி போகத், 2019 ஹரியானா தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார், ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வியடைந்தார்.  அவர் 2020 இல் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். 


தற்போது, சோனாலி போகத் கொலை வழக்கு விசாராணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடல் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள ‘கர்லீஸ்’ உணவகம் இடிக்கப்பட்டுள்ளது.