இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் இறப்புக்கு மும்பை டப்பாவாலா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.


முன்னதாகப் பேசிய மும்பை டப்பாவாலாக்களின் சங்கத் தலைவர் சுபாஷ் தலேகர், “இளவரசர் சார்லஸ் இந்தியா வந்தது முதல் மும்பை டப்பாவாலாக்கள் அமைப்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது.






இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் குறித்து கேள்விப்பட்டதில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், மேலும் அனைத்து டப்பாவாலாக்களும் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.






முன்னதாக  ராணி எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, 2015 மற்றும் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணங்களின் போது ராணியுடனான தனது மறக்கமுடியாத சந்திப்புகளை நினைவு கூர்ந்தார்.


"அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது, ​​மகாத்மா காந்தி தனது திருமணத்திற்குப் பரிசளித்த கைக்குட்டையை என்னிடம் காண்பித்தார். அந்தச் செயலை நான் எப்போதும் போற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.


இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.






அவரது மறைவால் இங்கிலாந்து நாட்டு மக்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.