பாஜக நிர்வாகி சோனாலி போகட்டின் மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, கோவா காவல்துறை குழு ஹரியானாவின் ரோத்தக்கில் உள்ள அவரது தனி உதவியாளரான சுதிர் சங்வானின் வீட்டிற்குச் சென்றுள்ளது. 


 






கோவா காவல்துறை அலுவலர்கள், ஞாயிற்றுக்கிழமை அன்று சுதிர் சங்வானின் இல்லத்திற்குச் சென்று, அடுத்துக்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். குருகிராமிற்குச் செல்வதற்கு முன், அதிரடியான விசாரணை நடைபெற்றது. மரணம் குறித்த விசாரணையை தொடர்ந்து சுதிர் சங்வான், மற்றொரு உதவியாளரான சுக்விந்தர் சிங் மற்றும் மூன்று பேரை கோவா காவல்துறை கைது செய்தது.


குருகிராமில், சுதிர் சங்வான் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருக்கிறார். அங்கு கோவா போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கொலை வழக்காக கருதப்படும் சோனாலி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சோனாலி போகட்டின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.


கோவா அரசு, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்காவிட்டால், இந்த வழக்கை சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்று சோனாலி போகத்தின் மருமகன் மொனிந்தர் உள்பட சில குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.


ஐந்தாவது நாளாக கோவா போலீஸ் குழு ஹரியானாவில் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை தொடர்பாக புதன்கிழமை ஹிசார் சென்றடைந்த குழுவினர், அதன் ஒரு பகுதியாக சாந்த் நகரில் உள்ள சோனாலி போகட்டின் பண்ணை வீடு மற்றும் வீட்டை பார்வையிட்டனர். சோனாலி போகட் மற்றும் சுதிர் சங்வான் ஆகியோரின் வங்கி மற்றும் சொத்து விவரங்களையும் அவர்கள் சேகரித்தனர்.


கோவா காவல்துறை, அவரது பெயரில் உள்ள நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மதிப்பீடு செய்து, சந்தேக மரணத்திற்கு சொத்துக் காரணமா என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகிறது. சோனாலி போகட்டின் கூட்டாளியான சுதிர் சங்வான் அவரது சொத்துக்களைப் பராமரித்து வருவதாக சில உறவினர்கள் முன்பு குற்றம் சாட்டினர்.


43 வயதான சோனாலி போகத்தின் மரணம், கொலை வழக்காகக் கருதப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் கோவா வந்த சில மணிநேரங்களில் அவர் இறந்தார். போகட் மற்றும் அவரது உதவியாளர்கள் ஆகஸ்ட் 22 அன்று இரவு பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர்.