கோவாவில் உள்ள மஹடேய் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக காட்டுத்தீ எரிந்துகொண்டு வருகிறது. இதையடுத்து, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் வனத்துறையின் கூட்டு முயற்சியால் கோவாவில் உள்ள மஹடேய் வனவிலங்கு சரணாலயத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறோம் என்று வனத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்தார்.
ஆறு நாட்களாக எரியும் தீ:
மஹடேய் வனப்பகுதியில் ஆறாவது நாளாக எரியும் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை Mi-17 ஹெலிகாப்டரை அனுப்பியது. இதுகுறித்து விமானப்படை வெளியிட்ட அறிக்கையில்,” கோவையை அடுத்த சூலூரின் Mi 17 V5 ஹெலிகாப்டர் மூலம் பிரம்மபுரம் கழிவு பதப்படுத்தும் ஆலையில் தீயை அணைக்க உதவும் 'பாம்பி பக்கெட்' கொண்டு தீயை அணைத்து வருகிறோம். அருகிலுள்ள நீர்த்தேக்கத்திலிருந்து 10800 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்திருந்தது.
விசாரணை :
கோவா அடுத்த சரவனே,சோர்லா காட், பாலி, சத்ரேம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மஹடேய் வனவிலங்கு சரணாலயத்தில் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ பெரும்பாலும் மர்ம நபர்களால் ஏற்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கிறோம். இதையடுத்து, குற்றவாளிகளை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கடந்த மார்ச் 8 ம் தேதி பேசிய அமைச்சர் ரானே, “ இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். வனவிலங்கு சரணாலயத்திற்குள் நுழைந்தாலோ அல்லது தீ வைத்தாலோ வனச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்” என்றும் எச்சரித்தார்.
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேற்று வடக்கு கோவாவில் உள்ள மஹடேய் வனவிலங்கு சரணாலயத்தில் காட்டுத் தீயை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கும் மர்மநபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ பல்வேறு இடங்களில் தீ சம்பவங்கள் நடைபெறுகின்றன. வேண்டுமென்றே தீ மூட்டுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற குற்றங்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என்றார்.
காட்டுத்தீ குறித்து பேசிய முன்னாள் தலைமை வனப் பாதுகாவலர் ரிச்சர்ட் டிசோசா, “நான் 1977 ஆம் ஆண்டு முதல் கோவாவில் இருக்கிறேன், நான் இதுவரை கண்டிராத மிக மோசமான தீ விபத்துகள் இவை. உலகம் முழுவதும், பசுமையான காடுகளில் ஏற்படும் தீ எப்போதும் மனிதர்களால் எப்போதும் உருவாக்கப்பட்டவை. பசுமையான காடுகள் ஈரப்பதமாக இருப்பதால் தீப்பிடிக்காது. மர்ம நபர்கள்தான் இதற்கு காரணமாக இருக்க வேண்டும். மக்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்தவும் தீயை கொளுத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இன்று காட்டுத்தீ எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து வனத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே ட்வீட் செய்தார்.
1.சத்ரேம் பரோட் - 1(சிறிய காட்டுத்தீ)
2.சத்ரேம் சிடிச்சிகோன் -1(சிறிய காட்டுத்தீ)
3.கிருஷ்ணாபூர், பெண்ட்ரல் பீட்-1
4.சிகாவ் பீட் -1(சிறிய காட்டுத்தீ)
5.அன்மோத் காட் -1(சிறிய காட்டுத்தீ)
6.போட்ரெம் பீட், நேத்ராவலி -1(சிறிய காட்டுத்தீ)
7.குர்கேம், தர்பந்தோரா-உஸ்கான், போண்டா-1
காலை 8 மணி நிலவரப்படி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 14 ஆம் தேதிக்குள் பாதிப்பு மதிப்பீட்டை வெளியிடவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழைவதைத் தடுக்கவும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.