கோவாவில் உடல் நலம் குன்றிய மனைவியை வைத்து கொண்டு, மாற்றுத்திறனாளி மகளுக்கு உணவளிக்க முடியாமல் தவித்து வந்த தினசரி கூலித் தொழிலாளி ஒருவர், எந்த வித தொழில் நுட்ப அறிவு இல்லாமல் யாருடைய துணையும் இல்லாமல் சிறுமிக்கு உணவளிக்க ரோபோவை உருவாக்கியுள்ளார்.


கோவா ஸ்டேட் இன்னோவேஷன் கவுன்சில், கூலித் தொழிலாளியான பிபின் கதமை அவரின் கண்டுபிடிப்புக்காக வெகுவாக பாராட்டியுள்ளது. அந்த ரோபோவிற்கு அவர் 'மா ரோபோட்' என பெயர் சூட்டியுள்ளார். மேலும், ரோபோவை தயார் செய்ததற்காகவும் அதன் வணிக நோக்கை கருத்தில் கொண்டும் இதுகுறித்து ஆராயவும் அவருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.


தட்டில் உணவு வைப்பது ரோபோவின் முக்கிய வேலையாகும். அச்சிறுமியால் தன் உடலை அசைக்கக் கூட முடியாது. அவரின் கைகளை உயர்த்த முடியாது. காய்கறி, பருப்பு, அரிசி என சிறுமி சாப்பிட விரும்பும் உணவு பொருளை வாய்ஸ் கமெண்ட் அடிப்படையில் ரோபோ அளித்து வருகிறது.


தெற்கு கோவாவின் போண்டா தாலுகாவில் உள்ள பெத்தோரா கிராமத்தில் வசிக்கும் 40 வயதுடைய கதம், தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தனது 14 வயது மகள் மாற்றுத்திறனாளி என்றும், அவரால் சாப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அவர் சாப்பாடு சாப்பிடுவதற்கு முழுக்க முழுக்க தன் அம்மாவையே நம்பியிருந்தார்.


இதுகுறித்து கதம் பேசுகையில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவி படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். எங்கள் மகளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாமல் தவித்து அழுதார். எங்கள் மகளுக்கு உணவளிக்க நான் வேலையிலிருந்து வர வேண்டியிருந்தது. யாரையும் சார்ந்திருக்காமல் தங்கள் மகள் நேரத்துக்குச் சாப்பாடு சாப்பிடுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் என மனைவி வலியுறுத்தினார்.


இதையடுத்து, உணவளிக்கக்கூடிய ஒரு ரோபோவை ஒரு வருடத்திற்கு முன்பே தேடத் தொடங்கினேன். இதுபோன்ற ரோபோ எங்கும் கிடைக்கவில்லை, அதனால் நானே அதை வடிவமைக்க முடிவு செய்தேன். நான் மென்பொருளின் அடிப்படைகளை அறிய ஆன்லைனில் தகவல்களைத் தேடினேன்.


நான் 12 மணிநேரம் இடைவேளையின்றி உழைத்துவிட்டு, எஞ்சிய நேரத்தை ரோபோவை தயாரிப்பது எப்படி என்று ஆராய்ச்சி செய்து கற்றுக்கொள்வேன். நான்கு மாதங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து இந்த ரோபோவை வடிவமைத்தேன். வேலை முடிந்து திரும்பும் போது எனக்கு உற்சாகம் கிடைக்கும். என் மகள் என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.


பிரதமர் நரேந்திர மோடி ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தை ஊக்குவித்து வருகிறார். அதேபோல், யாரையும் சார்ந்திருக்காமல், எனது குழந்தையை ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) ஆக்க விரும்பினேன். மற்ற குழந்தைகளுக்கும் இதே போன்ற ரோபோக்களை உருவாக்க விரும்புகிறேன். இந்த ரோபோவை உலகம் முழுவதும் கொண்டு செல்ல விரும்புகிறேன்" என்றார்.