பஞ்சாப் சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் வைக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலில் அறிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆம் ஆத்மி கட்சி பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அதற்கு எதிர்வினையாக கருதப்படுகிறது.


 






இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், "சுதந்திர போராட்ட தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பஞ்சாபியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


"இறுதியாக எங்கள் முயற்சிகள் பலனளித்தன. முழு பஞ்சாப் சார்பாக, சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் ஜி பெயரை சூட்டுவதற்கான முடிவை நாங்கள் வரவேற்கிறோம்" என திரு மான் பஞ்சாபியில் ட்வீட் செய்துள்ளார்.


சுதந்திரப் போராட்ட வீரரான பகத் சிங்கின் மரபை தூக்கி பிடிக்கும் வகையில், பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் பதவியேற்பு விழாவை ஆம் ஆத்மி நடத்தியது. 


நகைச்சுவையாளராக இருந்து பின், அரசியல்வாதியாக மாறிய பகவந்த் மான், மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்து, தனது சத்தியப்பிரமாணத்திற்கு மஞ்சள் நிற தலைப்பாகை மற்றும் துப்பட்டாக்களை அணியுமாறு மக்களுக்கு அவர் விடுத்த அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பின் பேரில், கட்கர் காலன் கிராமம் மஞ்சள் நிற தலைப்பகை அணிந்த மக்களால் நிரம்பியது. 


இடம் மற்றும் அலங்காரத்தின் கருப்பொருளாக மஞ்சளே இருந்தது. பகத் சிங், புரட்சியின் அடையாளமாக தலைப்பாகையை அணிந்திருந்தார். பகத் சிங், ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படும் என்றும் பகவந்த் மான், பதவியேற்றி சில நாட்களிலேயே அறிவித்திருந்தார்.


இளைஞர்கள் மற்றும் வட இந்தியாவின் கிராமப்புறங்களில் பிரபலமாக உள்ள பகத் சிங்கின் பாரம்பரியத்தை உரிமை கொண்டாட ஆம் ஆத்மி கவனமாக வியூகம் வகுத்தது.


சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் விமான நிலையத்திற்கு பகத் சிங்கின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பது இது முதல் முறை அல்ல. பாஜக தலைமையிலான அரசு ஹரியானா சட்டப்பேரவையில், 2016 ஏப்ரலில் இது தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த கோரிக்கையுடன் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு விரைவில் கடிதம் எழுத உள்ளதாக மாநில அரசு கூறியது.