மைனர் சிறுமிகள் பாலியல் வன்புணர்வு வழக்கில் கோவா முதலமைச்சர் ப்ரமோத் சாவந்த்தின் கருத்து அந்த மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கோவா மாநிலத்தில் கடலோரம் இரவில் சுற்றிய 14 வயது மதிக்கத்தக்க சிறுமிகள் இரண்டு பேரை அரசு அதிகாரி உட்பட நான்கு பேர் காவல்துறை அதிகாரிகள் போல நடித்து பாலியல் வன்புணர்வு செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் அந்தச் சிறுமிகளுடன் வந்த இரண்டு சிறுவர்களையும் இந்த நால்வரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது அந்த மாநிலத்தைப் பற்றி எரியச் செய்துள்ளது. 


இதற்கிடையே இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ள அந்த மாநில முதல்வர் ப்ரமோத் சாவந்த் இரண்டு சிறுமிகளும் இரவில் கடலுக்குச் சென்றது குறித்து பெற்றோர்கள் ஏன் எனக் கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்து வலுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





அவரது கருத்தில், ‘ஒரு 14 வயது சிறுமி இரவு முழுவதும் கடற்கரையில் தங்கும்போது பெற்றோர்கள் ஏன் எனக் கண்டறிய வேண்டும். பிள்ளைகள் சொன்ன பேச்சு கேட்பதில்லை என்பதற்காக அரசாங்கத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பழிசுமத்தக்கூடாது ’ எனக் கூறியுள்ளார். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது பெற்றோரின் கடமை என்றும் அவர்கள் இரவில் வெளியே சென்றிருக்கவே கூடாது என்றும் அவர் நேற்று கோவா சட்டப்பேரவையில் பேசியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


எதிர்கட்சிகள் இதனால் அங்கே கொதித்து எழுந்துள்ளனர். சிலர் கோவா முதல்வர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அல்டோன் டி காஸ்டா, ‘இரவில் வெளியே நடமாட நாம் ஏன் பயப்பட வேண்டும். குற்றவாளிகள் சிறையில் இருக்க வேண்டும். சட்டத்தை மதிப்பவர்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.






சிவசேனா தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘தனது கடமையைத் தட்டிக்கழிக்கும் அருவருக்கத்தக்க செயல். வெட்கமற்றவர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


முதல்வரின் கருத்து அருவருக்கத்தக்கதாக உள்ளது என கோவா ஃபார்வர்ட் கட்சி தலைவர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.மேலும் குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது அரசு மற்றும் போலீஸின் கடமை. அதனைத் தரமுடியாதவர்கள் பதவிவிலக வேண்டும் எனக் கூறியுள்ளார்.


இந்த குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய கோவா சட்டமன்ற விவாதத்தில் இந்த குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பற்ற செல்வாக்குள்ள சிலர் முயன்றதாக எம்.எல்.ஏ. ஒருவர் சொன்னது குறிப்பிடத்தக்கது.