அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?! பேசவராவிட்டால் என்ன சிக்னல் செய்தாவது தாயைக் காப்பாற்றுவேன் என்று செயல்பட்டிருக்கிறாள் ஒரு குட்டிப்பாப்பா.


உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் ரயில் நிலையத்தில் தனது தாய் மயங்கிவிழுந்துவிட அருகில் தம்பிப்பாப்பா தூங்கிக் கொண்டிருக்க 2 வயது பெண் குழந்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனாள். சுற்றும்முற்றும் யாரும் இல்லாத நிலையில் தட்டுத்தடுமாறி நடந்து சென்று அடுத்த ரயில் மேடையில் இருந்த காவலர்களிடம் ஏதோ சொல்லியிருக்கிறது குழந்தை. குழந்தை ஏதோ பதற்றத்தில் இருப்பது மட்டும் காவலர்களுக்குப் புரிந்துள்ளது. அந்தக் குழந்தை பெண் காவலர் ஒருவரின் விரலைப் பிடித்து தன்னுடன் வருமாறு அழைக்க அனைவரும் குழந்தையைப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அங்கே ரயில் நடைமேடையில் இளம் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அருகில் ஆண் குழந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் பலனளிக்கவில்லை. ஆனால், அப்பெண் உயிருடன் தான் இருந்தார். உடனே ரயில்வே போலீஸார் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு அருகிலிருந்த அரசு ஆஸ்பத்திரிக்கும் ஃபோன் செய்தனர். ஆம்புலன்ஸ் வரவே அப்பெண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து இரண்டு நாட்களாக அந்தப் பெண் மயங்கிய நிலையில்தான் இருக்கிறார்.


இதனால், அந்தப் பெண் குறித்த தகவலை அறிய முடியவில்லை.


அப்பெண்ணை சோதித்த மருத்துவர் சோபித், அந்தப் பெண் இன்னும் பாதி மயக்க நிலையிலேயே இருக்கிறார். அவரால் எந்தத் தகவலும் பகிர முடியவில்லை. அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதன்படி சிகிச்சை மேற்கொள்ளப்படும். அவர் மயக்கத்திலிருந்து மீண்டால் தான் அவரைப் பற்றிய விவரம் தெரியவரும் என்றார். இதற்கிடையில், குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்செய்தியைப் படித்த இணையவாசிகள் குழந்தையின் அன்பைப் போற்றி வருகின்றனர்.


இன்னும் சிலர், 2 வயது பெண் குழந்தை மற்றும் அதன் தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் தான் இந்தியா முதல் கொரோனா ஊரடங்கை சந்தித்தது. அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரு நடைபயணமாகவே தங்களின் சொந்த ஊருக்குச் சென்றனர். அந்த ஊரடங்கின் போது பிஹாரில் உள்ள ரயில் நிலையத்தில் நீண்ட தூர பயணம், பசி மற்றும் அதிக வெப்பத்தால் உயிரிழந்த தாயை விளையாடுவதற்காக எழுப்பும் இந்த சின்னஞ்சிறு குழந்தையின் வீடியோவும், புகைப்படம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இந்நிலையில், தற்போது தாயை அன்பால் கட்டிக்காக்க முயன்ற குழந்தையின் பாசப்போராட்டச் செய்தி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது