அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் பொது இடங்களில் தங்களை மீறி கோபப்படுவது உலகளவில் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்திய அளவிலும் பல்வேறு தலைவர்கள் அவ்வாறு கோபப்பட்டது உண்டு. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் எளிதில் கோபப்படக்கூடியவர். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளது. தற்போது அந்த உதாரணங்களில் கூடுதலாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானாவில் மின்விசைத்தறி தொழிலாளர்களுக்காக அந்த மாநில அரசு சார்பில் குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பகீரதா திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 26 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 80 கோடி மதிப்பில் 1,320 இரண்டு படுக்கைகள் கொண்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தில் மண்டபள்ளி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பு மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற விழாவில் 6 பயனாளிகளுக்கு அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்களை முதல்வர் சந்திரசேகர் ராவ் அளித்தார். பின்னர் 36வது பிளாக்கில் அமைந்துள்ள வீட்டு எண் 3ஐ திறப்பதற்காக சந்திரசேகர் ராவ் சென்றார். அங்கு வீட்டின் வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை கட் செய்வதற்காக ரிப்பன் முன்பு சந்திரசேகர் ராவ் வந்து நின்றார். அப்போது, ரிப்பனை வெட்டுவதற்காக நீட்டப்பட்ட தட்டில் கத்திரிக்கோல் இல்லாமல் இருந்தது. இதனால், அவர் கோபம் அடைந்தார்.
அவர் கோபம் அடைந்ததை கண்ட அதிகாரிகள் உடனடியாக கத்தரிக்கோலை கொண்டு வருமாறு அருகில் இருந்தவர்களிடம் சத்தமிட்டனர். சந்திரசேகர ராவும் சில நிமிடங்கள் கத்தரிக்கோல் கொண்டு வரப்படும் என்று காத்திருந்தார். ஆனால், கத்தரிக்கோலை யாரும் கொண்டு வராததால் கோபமடைந்த சந்திரசேகர் ராவ் வீட்டின் வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை தனது கையாலே பிடித்து இழுத்துவிட்டார். பின்னர், அந்த வீடு ஒதுக்கப்பட்ட குடும்பத்தினரை வீட்டிற்கு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும், பயனாளிகளுக்கு புதிய துணிகள் வழங்கியதுடன் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார். பின்னர், அந்த குடும்பத்தினருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சந்திரசேகர் ராவ் ரிப்பனை கோபத்தில் பிடித்து இழுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.