காஜியாபாத்தின் ராஜ் நகர் விரிவாக்கத்தில் உள்ள ஒரு கேட்டட் கம்யூனிட்டியில் பெண்கள் இருவர் அடித்துக் கொண்ட சம்பவம் தற்போது வைரலாகி உள்ளது. இந்த சண்டையின் போது அங்கு சுற்றி இருந்த குடியிருப்பவர்கள் அதனைக் கேமராவில் பதிவு செய்ததால் தவறான காரணங்களுக்காக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அடித்துக்கொண்ட பெண்கள்:
தெருவில் வசிக்கும் நாய்களை அந்த வளாகத்தில் தடை செய்வது தொடர்பாக பெண்கள் இருவர் வாக்குவாதம் செய்ததால் இந்தச் சண்டை ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர்கள் முடியை இழுப்பதையும், ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதையும், மேலும் ஆவேசமாக "மாரோ, மாரோ(அடி, அடி)” எனக் கூறுவதையும் அந்த வீடியோவில் கவனிக்கலாம் .
என்ன காரணம்..?
ட்விட்டரில் காவல்துறை பகிர்ந்துள்ள வீடியோவில் இருந்து, ரிவர் ஹைட்ஸ் சொசைட்டி என்கிற அந்த கம்யூனிட்டியின் கமிட்டியில் தெருநாய்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்ற முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த கம்யூனிட்டியில் உள்ள நாய் பிரியர்கள் அங்கே சங்கத்தின் அதிகாரிகளிடமிருந்து எடுத்த முடிவு குறித்து கோபமடைந்துள்ளனர். தெருநாய் தடை குறித்து இருவேறு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடால் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் ஜனவரி 11, 2023 அன்று நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொலைக்காட்சி ஒன்றின் அறிக்கையின்படி, நாய்கள் அந்த கம்யூனிட்டியில் இருந்து பிடிக்கப்பட்டு கோணிப்பைகளில் தூக்கிச் செல்லப்படுகின்றன. விலங்குகளை நேசிக்கும் குடியிருப்பாளரான பூனம் காஷ்யப் தெருநாய்கள் மீதான இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் எழுப்பியதை அடுத்து பிரச்னை வெடித்து அங்கே சண்டை வெடிக்கிறது.
முன்னர் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக நாய்கள் மனிதர்களைத் தாக்கிய சம்பவத்தை அடுத்து பிட் புல், ராட்வீலர் மற்றும் டோகோ அர்ஜென்டினோ ஆகிய மூன்று வலுவான நாய் இனங்கள் காசியாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனால் செல்லப்பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.