இந்தியாவில் தற்போது செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அடுத்தபடியாக சந்தைக்கு புதிய வரவாக வர இருப்பதுதான் ஸ்புட்னிக் வி தடுப்பூசி. ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விநியோகம் இந்தியாவில் தொடங்குவதற்கு முன்பே பலர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த தடுப்பூசி. இந்தியா 56.6 டன் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்துள்ளது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளிலேயே இதுவே அதிகபட்சமான எண்ணிக்கையாகும். இதன்மூலம் இந்தியா முழுவதும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்தும் பணிகளை துவக்க தேவையான அளவு மருந்து தற்போது நம் கைவசம் உள்ளது.



அப்படி என்ன ஸ்பெஷல் - ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்திறன்!


ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்திறன் 91.6 சதவீதம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் 18,794 நபர்களிடம் மேற்கொண்ட ஆய்வு முடிவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 95 சதவீதம் செயல்திறன் கொண்டது என ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் தடுப்பூசி 78-81 சதவீதமும் , கோவிஷீல்டு 82-90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மிகுந்த செயல் திறன் கொண்ட தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி கண்டறியப்படுகிறது.


இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை ?


ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் இந்திய சந்தையில் 995 ரூபாய் 40 பைசாவிற்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்திக்கொள்ள 1990 ரூபாய் முதல் 2000 ரூபாய் செலவழிக்க நேரிடும். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டுடனும் ஒப்பிடும்போது ஸ்புட்னிக் வி விலை அதிகம். கோவாக்சின் அரசு மருத்துவமனைக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது, அதேநேரம் கோவிஷீல்டு அரசு மருத்துவமனைக்கு 300 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி முழுமையான அளவு தொடங்கிய பிறகு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எப்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி விநியோகம் இந்தியாவில் துவங்கும் ?


அப்பல்லோ மருத்துவ குழுமம் இந்தியாவில் ஜூன் 2-வது வாரத்தில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது, இதன் விலை 1195 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளது. டெல்லி அரசு ஜூன் 20-ஆம் தேதி முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விநியோகம் துவங்கும் என அறிவித்துள்ளது. மிக விரைவில் இந்தியா முழுவதும், அணைத்து மருத்துவமனைகளிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் துவக்கப்படவுள்ளது.


மேலும் அறிய : தோனிக்கு எழுந்துள்ள புதிய தலைவலி - சென்னை அணிக்கு பின்னடைவா?


ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் வகைகள் ?


ஸ்புட்னிக் வி தடுப்பூசி பவுடர் மற்றும் திரவ வகைகளில் உள்ளது. திரவ வகையில் இருக்கும் ஸ்புட்னிக் வி மருந்து 18 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலையில் வைக்கப்பட வேண்டும், அதே நேரம் பவுடர் வகையில் உள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்து 2 முதல் 8 டிகிரி வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும்.


ஸ்புட்னிக் வி சரி, அது என்ன ஸ்புட்னிக் லைட் ?


ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி மட்டுமின்றி, ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான இரண்டு டோஸ் நடைமுறைகள் இல்லாமல், ஸ்புட்னிக் லைட் ஒரு டோஸ் செலுத்தினாலே போதுமானது. ஆரம்பகட்ட ஆய்வு முடிவுகளில் இதன் செயல்திறன் 79.4 சதவீதம் என கண்டறியப்பட்டுள்ளது.


எத்தனை நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாடு உள்ளது ? 


தற்போது வரை 68 நாடுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.