கொல்கத்தாவைச் சேர்ந்த தன்பால் ஈர்ப்பு  ஜோடியான சைதன் ஷர்மா மற்றும் அபிஷேக் ரே, ஜூலை 3ம் தேதி அன்று பாரம்பரிய முறைப்படி ஒடிசா மாநில புபனேஷ்வரில் உள்ள ஓட்டலில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட அவர்களின் திருமணத்தின் படங்கள் உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி அனைவரையும்  பிரமிப்பில் ஆழ்த்தியது.






திருமணம் பற்றி பேசிய  சைதன் “எங்கள் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடக்கவிருந்தது. இருப்பினும், கொரோனா சூழல் காரணமாக அந்த நேரத்தில் எனது குடும்பத்தினரால் வர முடியவில்லை, எனவே நிகழ்வை ஜூலைக்கு மாற்றினோம். திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நாங்கள் இருவரும் ஈடுபட்டோம்” என்றார். மேலும், திருமணம் செய்து கொள்வதற்கான அவர்களின் விருப்பத்திற்கும் முடிவிற்கும் அனைவரும் மிகவும் ஆதரவாக இருந்ததாகவும் அவர் கூறினார். "திருமண ஏற்பாடுகளுக்காக நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம்.  ஹோட்டல்கள், நிகழ்வு நிறுவனம், அலங்கரிப்பாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் என அனைவரும் மிகுந்த ஈடுபாடும் ஆதரவையும் அளித்தனர். எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கூட மிகவும் உறுதுணையாக இருந்தார்” என்றார் அவர்.





மேலும் அபிஷேக் தனக்கு கணவராகக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும் மிகவும் கருணையான அபிஷேக்கை விட சிறந்த பார்ட்னர் வேறு எப்படிக் கிடைத்துவிட முடியும் என்றும் கேள்வி எழுப்பிய அவர், ‘’நீங்கள் நீங்களாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.இறுதியில் காதலே வெல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.