அமேசான் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, கவுதம் அதானி இப்போது உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.


புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அவரின் சொத்து மதிப்பு 154.7 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


எலான் மஸ்க். 273.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறார். கடந்த மாதம், அதானி அர்னால்ட்டை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால், மஸ்க் மற்றும் பெசோஸ் ஆகியோரை அவரால் பின்னுக்கு தள்ள முடியவில்லை.


153.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட பெர்னார்ட் அர்னால்ட், மூன்றாவது இடத்தில் உள்ளார். இருப்பினும், அவரது மொத்த சொத்து மதிப்பு இன்று 4.9 பில்லியன் டாலர்கள் அல்லது 3.08 விழுக்காடு சரிவை கண்டுள்ளது. அதே சமயம், பெசோஸ் 149.7 பில்லியன் டாலர்கள் செல்வத்துடன் 2.3 பில்லியன் டாலர்கள் குறைந்து நான்காவது இடத்தில் உள்ளார்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார். முதல் தலைமுறை தொழில்முனைவோரான அதானி, உள்கட்டமைப்பு, சுரங்கம், எரிசக்தி மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய அதானி குழுமத்திற்கு தலைமை தாங்குகிறார். 


கடந்த ஐந்து ஆண்டுகளில், விமான நிலையங்கள், சிமென்ட், காப்பர் சுத்திகரிப்பு, தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன், பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு, சாலைகள் மற்றும் சூரிய மின்கல உற்பத்தி உள்ளிட்ட புதிய வளர்ச்சித் துறைகளில் அதானி எண்டர்பிரைசஸ் அதிக முதலீடு செய்துள்ளது.


அதானி குழுமம், தொலைத்தொடர்பு துறையில் தடத்தை பதிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. மேலும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் விமான நிலைய வணிகங்களை மேம்படுத்துவதற்கான பாரிய திட்டங்களையும் கொண்டுள்ளது. அதானி குழுமம் பசுமை எரிசக்தி உள்கட்டமைப்பிற்காக 70 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அதானி, 2022ல் மட்டும் தனது சொத்தை 60 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளார். மற்ற பணக்காரர்களை விட ஐந்து மடங்கு அதிகம். பிப்ரவரியில் அம்பானியை முந்திச் சென்று, ஏப்ரலில் செண்டிபில்லியனர் (நிகர சொத்து $100 பில்லியன் அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள்) ஆக உருவெடுத்தார்.


இதற்கிடையில், ஜூன் 24 அன்று அவரது 60ஆவது பிறந்தநாளில், அதானி சமூக சேவைக்காக 60,000 ரூபாய் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தார்.


அதானி சமீபத்தில் வாங்கிய நிறுவனங்கள்


ஊடகம்


ஆகஸ்ட் 23 அன்று, அதானி குழுமத்தின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட் (ஏஎம்என்எல்), விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்) நிறுவனம் மூலம் என்டிடிவியை தொடங்கிய ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் (ஆர்ஆர்பிஆர்) நிறுவனத்தின் 99.99% பங்குகளை வாங்குவதற்கான செயல்முறையைத் தொடங்கியதாக அறிவித்தது. NDTVயில் 26% பங்குகள் வரை பெறுவதற்கான திறந்த சலுகையில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், என்டிடிவி தனது ஒப்புதல் கோரப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.


சிமென்ட் 


மே மாதத்தில், ஹொல்சிம் ஏஜியின் சிமென்ட் நிறுவனத்தை 10.5 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அதானி குழுமம் அறிவித்தது. அதானியின் மிகப்பெரிய கையகப்படுத்தல் நடவடிக்கை இதுவாகும்.


மின்சாரம்


ஆகஸ்ட் 19 அன்று, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் உற்பத்தியாளரான அதானி பவர், அனல் மின் நிலைய ஆபரேட்டரான டிபி பவரை ரூ.7,017 கோடி நிறுவன மதிப்புக்கு வாங்குவதாகக் அறிவிப்பு வெளியிட்டது.


துறைமுகம்


ஜூலை மத்தியில், இஸ்ரேல் தனது மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மையமான ஹைஃபா துறைமுகத்தை அதானி துறைமுகங்கள் மற்றும் உள்ளூர் இரசாயனங்கள் மற்றும் தளவாடக் குழுவான கடோட்டிற்கு 1.18 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதாக அறிவித்தது.


சாலை உள்கட்டமைப்பு 


இந்த மாத தொடக்கத்தில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள Macquarie Asia Infrastructure Fundஇன் இந்தியா சுங்க சாலைகளை ரூ.3,110 கோடிக்கு வாங்கும் என தகவல் வெளியிட்டுள்ளது.