ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் பகுதியில் நடைபெறுகிறது. இதில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஸி ஜிங்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 


 


இந்நிலையில் ஷாங்காய் மாநாட்டில் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதற்கு முன்பாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். மேலும் உஸ்பெகிதான் அதிபர் ஷவ்கட் மிர்சியோவை சந்தித்து பேசினார். அதன்பின்னர் மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பேச உள்ளார். 


 






லடாக் பகுதியில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜிங்பிங் ஒரே மேடையில் இடம்பெற்றுள்ளனர். இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் தங்களுடைய பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாக பேச உள்ளன. அத்துடன் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தொடர்பாகவும் பேச்சுவாரத்தை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “உலகம் முழுவதும்  தற்போது கொரோனா மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் அனைத்து துறைகளின் மேம்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவை உற்பத்தி நாடாக மாற்றுவதே எங்களுடைய ஆசை. மக்கள் சார்ந்த வளர்ச்சி திட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். தற்போது இந்தியாவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. மேலும் இந்திய பொருளாதாரம் இந்தாண்டு 7.55% வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா பொருளாதாரம் உலகத்தில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.






இந்தக் கூட்டத்திற்கு பிறகு ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சீன அதிபர் ஸி ஜிங்பிங் உடனும் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் எல்லையில் நடைபெற்ற பதற்றமான சூழலுக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜிங்பிங் முதல் முறையாக சந்திக்க உள்ளனர். ஆகவே அந்த பிரச்னை தொடர்பாக பேசப்படும் என்று கருதப்படுகிறது. கடந்த வாரம் லடாக் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இந்தியா மற்றும் சீனா படைகளை விலக்கி கொண்டு வந்தன.