பிறந்த குழந்தையை கொலை செய்த வழக்கில் தந்தையை விடுதலை செய்து சர்ச்சையை கிளப்பியுள்ளது குவஹாத்தி உயர் நீதிமன்றம். முதலில், பிறந்து உடனேயே குழந்தையை விற்க தந்தை முயற்சி செய்துள்ளார். அது தோல்வியில் முடிந்துள்ளது. இதையடுத்து, சரியான நேரத்திற்காக காத்திருந்த நபர், ஒரு மாதத்திற்கு பிறகு தன்னுடைய குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பிறந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை..?
இந்த விவகாரத்தில், குழந்தையின் தாய் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில், தானும் தன்னுடைய கணவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். திருமணம் செய்து கொண்ட மூன்றே மாதங்களில் மனைவியை அவர் துன்புறுத்த தொடங்கியதாக மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.
தங்களுக்கு மகன் பிறந்தபோது, தன்னுடைய கணவர் குழந்தையை விற்க முயன்றதாகவும், ஆனால் மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள் அதைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் அவர் முதல் தகவல் அறிக்கையில் புகார் கூறியுள்ளார்.
அதன்பிறகு, ஒரு மாதத்திற்குப் பிறகு, தம்பதியினர் குழந்தையுடன் வீட்டிற்கு வந்தபோது, மனைவியை தாக்கிவிட்டு, குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, அடையாளம் தெரியாத இடத்தில் அவரது உடலைப் புதைத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
தொடரும் மர்மம்:
கடந்த 2017ஆம் ஆண்டு, இந்திய தண்டனை சட்டம் 302/201 பிரிவுகளின் கீழ் செஷன்ஸ் நீதிமன்றம், அவரை குற்றவாளி என தீர்ப்பு அளித்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டவர் மேல்முறையீடு செய்தார். அப்போது, உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "தம்பதியரின் குழந்தை இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தை இறந்ததற்கான மருத்துவ ஆதாரம் எதுவும் இல்லை" என வாதிட்டார். மேலும், கூறப்படும் சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தகைய தாமதம் குறித்து அரசுத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை செய்த உயர்நீதிமன்றம்:
இதை தொடர்ந்து பதில் அளித்த கூடுதல் அரசு வழக்கறிஞர், "குற்றம்சாட்டப்பட்டவர் மீதான வழக்கை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அவரது மனைவிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், "வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில், உடலை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், தகவல் கொடுத்தவரின் குழந்தை இறந்துவிட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும். தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்பது தெளிவாகத் தெரிந்தாலும், சாட்சிகள் அனைத்தும் அந்தக் குழந்தையின் மரணம் பற்றி மனைவி மூலம் மட்டுமே அறிந்ததாக தெரிவித்தனர்" என தெரிவித்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவதாக குவஹாத்தி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.