கர்நாடக தேர்தலில் மிக பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தாலும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் பிரச்னை நீடித்து வந்தது. பதவியை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்குவதா? கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கு வழங்குவதா? என குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது அந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.


பிடிவாதமாக இருந்த டி.கே. சிவக்குமார்:


சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கவும் டி.கே.சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் முடிவுக்கு வராத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி என கட்சி வட்டாரங்கள் கூறுகிறது.


முதலமைச்சர் பதவி தனது தனக்கு தர வேண்டும் என பிடிவாதமாக இருந்த டி.கே.சிவக்குமாரிடம், நேற்று மாலை சோனியா காந்தி பேசியுள்ளார். இதற்கு பிறகுதான், துணை முதலமைச்சர் பதவியை ஏற்று கொண்டுள்ளார் டி.கே.சிவக்குமார். "தியாகம் செய்ய முடிவு செய்துள்ளேன். கட்சியின் நலன் கருதி கர்நாடகாவின் துணை முதலமைச்சராக இருக்க ஒப்புக்கொண்டேன்" என சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் அதை மேலிடத்திற்கு விட்டுவிட்டோம். அவர்கள் முடிவு செய்கிறார்கள். தனிப்பட்ட நலனை விட கட்சியின் நலன் பெரிது. தலைமையின் முடிவை ஏற்க வேண்டும். இதுதான் இறுதி தீர்ப்பு. நம்மில் பலர் நீதிமன்றத்தில் வாதிடுவோம். இறுதியில், நீதிபதி கூறியதை ஏற்க வேண்டும்" என்றார்.


பிரச்னையை தீர்த்து வைத்த சோனியா காந்தி:


கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு, சித்தராமையாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க ஒப்பு கொள்ளவில்லை.  


இதற்கிடையே, சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "முதலமைச்சர் பதவி விவகாரத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.


வரும் சனிக்கிழமை நடைபெறும் கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஒத்து கருத்துடைய எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், இதில் கலந்து கொள்ள உள்ளனர்.


கர்நாடக அரசியல் வரலாற்றில் இதுவரை மூன்று முதலமைச்சர்கள்தான் ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளனர். அதில், ஒருவர் சித்தராமையா. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையில், கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்தார். மக்கள் மத்தியில் செல்வாக்க படைத்த தலைவரான இவர் ஆட்சியில்தான், கர்நாடகவுக்கு தனிக்கொடு அறிவிக்கப்பட்டது. 


இந்தி திணிப்புக்கு எதிரான நடவடிக்கையை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.