நதிகளில் பயணிக்கக்கூடிய உலகின் மிக நீளமான சொகுசு கப்பலை மத்திய அரசு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 


கங்கா விலாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், இந்தியாவில் உள்நாட்டு நீர்வழிப் பயணத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.






50 நாள்களுக்கு நீடிக்கும் இந்தக் கப்பல் பயணம் உத்தரபிரதேசம், வாரணாசியில் தொடங்கி அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் முடியும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி இந்தக் கப்பல் சேவை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்தியா தவிர்த்து வங்க தேசம் வழியாகவும் இந்தக் கப்பல் பயணிக்கும் என்றும், மொத்தம் 4,000 கிமீ தூரம் வரை இந்தக் கப்பல் பயணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொல்கத்தா மற்றும் டாக்கா போன்ற முக்கிய நகரங்கள் வழியாக மார்ச் 1 ஆம் தேதி அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள போகிபீலை சென்றடையும். 


இந்தியாவில் உள்ள முக்கிய பாரம்பரிய தளங்கள் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா தளங்கள் வழியாகவும், 27 வெவ்வேறு நதிகளின் வழியாகவும், கொல்கத்தா, டாக்கா போன்ற நகரங்களின் வழியாகவும் இந்தக் கப்பல் பயணிக்க உள்ளது.


" உலகின் ஒரே நதிக் கப்பலில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய பயணமாக இது அமையும்.  இந்தியா, வங்க தேசம் இரண்டு நாடுகளின் நதிப்பயணத்தையும் முன்வைக்கும். கப்பல் சேவைகள் உட்பட கடலோர மற்றும் நதி கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்" என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவின் தளவாட அமைப்புகளுக்கும் இது பயனளிக்கக்கூடும் எனவும் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.


இந்த கப்பலின் ஆபரேட்டர்கள், மத்திய அரசின் தலையீடு இல்லாமல், பயணச்சீட்டுக் கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கங்கை - பாகிரதி- ஹூக்ளி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நீர் வழிகளில் ஏற்கெனவே நதி கப்பல்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.