டெல்லியில் காதலனால் கொல்லப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா, மரணிப்பதற்கு முன்னால் தன்னை தன் காதலன் அஃப்தாப் அடித்து துன்புறுத்தி வந்ததாக ஏற்கெனவே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.


35 துண்டுகளாக வெட்டி காதலன் அப்தாப்பால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஷ்ரத்தா, ஏற்கெனவே  அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.






2019ஆம் ஆண்டு தன் வீட்டிலிருந்து வெளியேறி அஃப்தாப் உடன் லிவ் இன் உறவில் இருந்து வந்த ஷ்ரத்தா, முன்னதாக தன் தாயைக் காண அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் ஆனால் சில நாள்களில் அஃப்தாப் மன்னிப்பு கோரியதும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.


மும்பையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கால் சென்டரில் பணிபுரிந்து வந்த ஷ்ரத்தா அஃப்தாப்பை சந்தித்து, டேட் செய்யத் தொடங்கினார். இவர்களது உறவுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அங்கிருந்து இருவரும் டெல்லி சென்று, மெஹ்ராலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசிக்கத் தொடங்கினர்.


தொடர்ந்து அஃப்தாப்பிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷ்ரத்தா வற்புறுத்தத் தொடங்கிய நிலையில், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கியுள்ளது.


இந்நிலையில்,  மே 18ஆம் தேதி ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த அப்தாப், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, 300 லிட்டர் குளிர்சாதன பெட்டி ஒன்றை வாங்கி அவரது உடல் பாகங்களை பதப்படுத்தி வந்துள்ளார்.


மேலும் 18 நாள்கள் தினம் நள்ளிரவு 2 மணியளவில் வெளியே சென்று தனது காதலி ஷ்ரத்தாவின் உடல் துண்டுகளை டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் வீசியெறிந்து வந்துள்ளார். இவ்வழக்கை ஷ்ரத்தாவின் தந்தை விகாஷ் மதன் வாக்கர் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வந்த காவல் துறையினர், நேற்று (நவ.14) அஃப்தாப்பை கைது செய்தனர்.


இந்நிலையில் ஷ்ரத்தாவின் தோழி தன்னிடம் ஷ்ரத்தாவை கடந்த சில மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்ததை அடுத்து, தான் சந்தேகமடைந்து புகார் அளித்ததாக விகாஷ் மதன் தெரிவித்துள்ளார்.


முன்னதாக ஷ்ரத்தாவின் தாய் உயிரிழந்த நிலையில், அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தன்னிடமும் ஷ்ரத்தா தெரிவித்ததாக விகாஷ் மதன் தெரிவித்துள்ளார்.


இந்த கொடூர கொலை சம்பவம் குறித்துப் பேசிய ஷ்ரத்தாவின் தோழி லஷ்மி, தான் ஜூலை மாதம் முதலே ஷ்ரத்தா பற்றி நண்பர்களிடம் தொடர்ந்து விசாரித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு இது பற்றி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


தலைநகர் டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி காடுகளில் உடல் துண்டுகளை காதலன் வீசியெறிந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.