Gaganyaan Mission Test: மழையால் ககன்யான் திட்டத்தின் முதல் பரிசோதனை நிறுத்திவைப்பு: தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இஸ்ரோ

Gaganyaan Mission Test: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முதல் பரிசோதனை கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.

Continues below advertisement

Gaganyaan Mission Test: ககன்யான் திட்டத்திற்கான விண்கலத்தில் இருந்து வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பான பரிசோதனை, மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Continues below advertisement

இஸ்ரோவின் ககன்யான் திட்டம்:

கடந்த ஆகஸ்ட் மாதம் சந்திரயான் 3 விண்கலத்தை திட்டமிட்டபடி, நிலவின் தென்துருவத்திற்கு மிக அருகாமையில் தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த மிகப்பெரும் முயற்சியாக மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதற்காக ககன்யான் எனும் திட்டத்தை தொடங்கி, ஆராய்சியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதன் முதல்படியாக, ககன்யான் விண்கலம் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும்போது, அதிலிருந்து வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறுவது தொடர்பான பரிசோதனையை இஸ்ரோ மேற்கொள்ள திட்டமிட்டது.

முதல் பரிசோதனையில் இடையூறு:

ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின், முதல் சோதனை விண்கலமான (டிவி-டி1) என்ற ஒற்றை-நிலை திரவ ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமானது. அதேநிலை தொடர்ந்ததால், பரிசோதனை முயற்சி 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக சோதனை முயற்சியை தொடங்கிய நிலையில், கவுண்டவுனில் கடைசி 5 விநாடிகள் இருந்தபோது மோசமான வானிலை மற்றும் சிறு தொழில்நுட்ப கோளாறால் பரிசோதனை கைவிடப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது. பர்சோதானைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

சோதனை விண்கல விவரம்:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த பரிசோதனை நிகழ்த்தப்பட இருந்தது. இதற்கான TV-D1 விண்கலமானது  முன்புறத்தில் க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் பொருத்தப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட VIKAS இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 34.9 மீட்டர் உயரமும், 44 டன் எடையும் கொண்டுள்ளது. விரைவில் மாற்று தேதியில் இந்த பரிசோதனை நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசோதனையின் நோக்கம் என்ன?

ககன்யான் திட்டத்தின்படி, 3 ஆராய்ச்சியாளர்களை விண்ணுக்கு அனுப்பி, அங்கு பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு மீண்டும் அவர்களை பாதுகாப்பாக புவிக்கு அழைத்து வருவது தான் இலக்கு. இதற்காக வடிவமக்கப்படும் ராக்கெட்டில் 3 நிலைகள் இருக்கும். அதில் மையப்பகுதியில் தான் ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். அவ்வாறு செல்லும் வீரர்கள் விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு புவிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தை அடைந்ததும் விண்கலத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி இந்திய பெருங்கடலில் தரையிறங்க வேண்டும். அப்படி பாதுகாப்பாக தரையிறங்கும் முயற்சியின் வெற்றி தோல்வியை உறுதி செய்வதற்காக தான் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

இஸ்ரோவின் அடுத்த திட்டம் என்ன?

எதிர்காலத்தில் இஸ்ரோ திட்டமிட்டுள்ள 20 பெரிய சோதனைகளில் இதுவே முதன்மையானது. 2035ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தை இஸ்ரோ அமைத்து, 2040ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் பிரதமர் மோடி இலக்கை நிர்ணயித்துள்ளார். அதற்கு உந்துசக்தியாக இந்த சோதனை பார்க்கப்படுகிறது. அடுத்த முயற்சியில் இந்த பரிசோதனை வெற்றி அடைந்தால் அடுத்தடுத்த தகுதிச் சோதனைகள் நடத்தப்பட்டு, மனிதனை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பி புவிக்கு அழைத்து வருவது உறுதி செய்யப்படும். 

Continues below advertisement