ஜி20 நாநாட்டை முன்னிட்டு தலைநகர் டெல்லியில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கி சாலை போக்குவரத்து வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஜி20 உச்சி மாநாடு:


உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ள, ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி மாவட்டம் முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், நாளை முதல் பொதுமக்களுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 


டெல்லியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:



  • மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் டெல்லியில் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க உள்ளதால் 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

  • டெல்லி மாவட்டத்தில் எந்த வணிக நிறுவனங்களும் செயல்படாது

  • உணவு விநியோகம் உள்ளிட்ட ஆன்லைன் வியாபாரம் எதுவும் நடைபெறாது

  • பொதுமக்கள் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் மன ஆறுதலுக்காக வந்து செல்லும் பூங்கா போன்ற இடங்கள், சுற்றுலா பயணிகளின் வருகைத்தளமுமான கடமைப்பாதை ஆகிய பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

  • வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் 10ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் 

  • நாளை தொடங்கி 3 நாட்களுக்கு மாநகரம் முழுவதும் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன

  • அடுத்த  3 நாட்களும் விமான பயணம் மற்றும் ரயில் பயணத்துக்காக திட்டமிட்டு இருப்பவர்கள் போக்குவரத்து ஆலோசனைகளை முன்கூட்டியே அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

  • மெட்ரோ ரெயில் நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு உள்ளனர்

  • ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன

  • உச்சநீதிமன்றம், பட்டேல் சவுக், ஆர்.கே.ஆஸ்ரம் ஆகிய மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டு உள்ளது

  • மற்ற பகுதிகளுக்கு அதிகாலை 4 மணி முதலே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்

  •  டெல்லியிள் வெளிநாட்டு தலைவர்கள் தங்கும் விடுதிகள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. அந்த விடுதிகளின் நுழைவு வாயில்கள் முன் உள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன்புற ரோடும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது

  • விமான பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கான தங்களது பயணத்தை தொடங்க வேண்டுமென ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன