வீடுகள், குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படுவது என்பது அடிப்படை கட்டமைப்பு ஆகும். இந்த சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்வது மட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அதை முறையாக மூடி வைத்து பராமரிக்க வேண்டியது அந்தந்த பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் கடமை ஆகும்.
திறந்து கிடந்த சாக்கடை:
சில சமயங்களில் அதில் அலட்சியமாக இருக்கும்போது அசம்பாவிதங்கள் அரங்கேறுகிறது. அந்த வகையில் ஹைதரபாத்தில் அரங்கேறிய அசம்பாவிதம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹைதரபாத்தில் அமைந்துள்ளது பிரகதி நகர். ஹைதரபாத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், பிரகதி நகரில் உள்ள சாக்கடைகளில் கழிவு நீரும், மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியது.
பிரகதி நகர் முழுவதும் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் நிரம்பியிருந்தது. அங்கு வசித்து வந்த தம்பதியின் 4 வயது மகன் ஒருவன் நேற்று மதியம் அந்த சாக்கடைகளில் மேல் உள்ள மூடியின் மீது தாவி விளையாடிக் கொண்டிருந்தான். அந்த சிறுவனுக்கு முன்பு அவனது உறவினர் ஒருவர் நடந்து செல்ல அவரைப் பின்தொடர்ந்து அந்த சிறுவனும் சென்றுள்ளான். அப்போது, இடையில் மூடப்படாமல் இருந்த இடத்தை அந்த முதியவர் தாவி கடந்தார். ஆனால், அதைத்தாவி கடக்க முயற்சித்த சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்த கால்வாயில் விழுந்தான்.
சிறுவன் உயிரிழப்பு:
மழைநீரும், சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடியதால் கால்வாயில் தண்ணீரின் வேகம் அதிகளவில் இருந்துள்ளது. இதனால், அந்த சிறுவன் சாக்கடையிலே அடித்துச் செல்லப்பட்டுள்ளான். பின்னால் வந்த சிறுவனை காணாத அந்த உறவினர் உடனடியாக அந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் பதறியடித்துக்கொண்டு சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனை தேடினர். சுமார் 1 மணி நேர தேடலுக்கு பிறகு சிறுவன் அருகில் உள்ள நீர்நிலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். சாக்கடை கால்வாயில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த கால்வாய் தனியாருடையது என்றும், கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் அந்த வடிகால் மூடி திறக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: திமுக முன்னாள் மண்டலத்தலைவர் பெங்களூரில் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்ல முயற்சி - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
மேலும் படிக்க; தொடர்ந்த திருட்டு..! வைக்கப்பட்ட புதிய சிசிடிவி..! பொறியில் சிக்கி கைதான திருட்டு கும்பல்..!