டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டமைப்பின் 18ஆவது மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் (One Earth, One Family, One Future) என்ற கருப்பொருளுடன் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 நாடுகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


ஜி20 அமைப்புக்கு இந்தியா முதல்முறையாக தலைமை வகிப்பதால் உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட டெல்லி உச்சி மாநாட்டில் நிகழ்ந்த 5 முக்கிய வரலாற்று நிகழ்வுகளை இந்த தொகுப்பில் காணலாம்.


உறுப்பு நாடாக இணைந்த ஆப்பிரிக்க ஒன்றியம்:


ஜி20 அமைப்பின் புதிய உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய உலக ஒழுங்கு முன்னெடுக்கப்பட்டு, உலக அரங்கில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் வளரும் நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.


அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் இணைப்பு வசதி:


அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா, வளைகுடா மற்றும் அரபு நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை இணைக்கும் வகையில் விரிவான ரயில் மற்றும் கப்பல் பாதை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட டெல்லி பிரகடனம்:


சீன, ரஷியா அகிய நாடுகளின் ஆதரவோடு டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டுள்ளது. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை, சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை நிலைநாட்ட பிரகடனத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க பலதரப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான், கென்யா, ஜாம்பியா, லாவோஸ், மங்கோலியா போன்ற வளரும் நாடுகளை கடனில் சிக்க வைத்துள்ள சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு மாற்றாக டெல்லி பிரகடனம் உள்ளது.


உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி:


தூய்மையான எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிக்க உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணியை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தாவரங்கள் மற்றும் விலங்கு கழிவுகள் உட்பட பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட பயோ எரிபொருளின் வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை சந்திக்க இந்த கூட்டணி உலகளாவிய முயற்சிகளை துரிதப்படுத்தும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இழக்கப்பட்டு நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சி:


கொரோனாவுக்கு பிறகு, நம்பிக்கையின்மையால் உலகில் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "21 ஆம் நூற்றாண்டு உலகிற்கு ஒரு புதிய திசையைக் காட்ட ஒரு முக்கியமான நேரம் இது. நாம் அனைவரும் புதிய சவால்களை நோக்கி சென்றிருக்கிறோம். 


எனவே, நமக்கான பொறுப்புகளை நிறைவேற்றி முன்னேற வேண்டும். கொரோனாவை நம்மால் தோற்கடிக்க முடிந்தது. அதேபோல, போரினால் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா பிரயாஸ் என்ற மந்திரம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும்" என்றார்.


இதையும் படிக்க: செனகல் அதிபருக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி.. குட்டிக்கதை சொன்ன மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்