உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கி வரும் நிலையில், உச்சி மாநாடு இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதை, பாஜக தலைவர்கள் பிரதமர் மோடியின் வெற்றியாக புகழ்ந்து வரும் நிலையில், காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.


"14 கோடி மக்களின் உணவு உரிமை பறிப்பு"


நாட்டில் 14 கோடி மக்களின் உணவு உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து அவர் பேசுகையில், "மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் உணவு உரிமை திட்டத்தில் இருந்து 14 கோடி மக்கள் விடுபட்டுள்ளனர்" என்றார்.


கசப்பை தரும் தரவுகளை மத்திய அரசு நீக்கி வருவதாக கூறிய ஜெய்ராம் ரமேஷ், "கொரோனா பெருந்தொற்று இருந்தபோதிலும், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் உள்பட ஏறக்குறைய அனைத்து G20 நாடுகளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.


"தேசம் சந்திக்காத வரலாற்று தோல்வி"


கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்டப்படி நடத்தப்படும், இந்தியாவின் மிக முக்கியமான புள்ளிவிவரங்களை வழங்கும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது. இது, மோடி அரசின் திறமையற்றத்தன்மையை காட்டுகிறது. நமது தேசம் சந்திக்காத வரலாற்று தோல்வி இதுவாகும்.


மக்கள்தொகை கணக்கெடுப்பு இல்லாத நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 14 கோடி இந்தியர்கள் உணவு உரிமையில் இருந்து விடுப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அரசின் பொது விநியோக திட்டத்தின் மூலம் உணவு பொருள்களை பெற்ற கொள்ள 67 சதவிகித இந்தியர்கள் தகுதி வாய்ந்தவர்கள். மோடி அரசாங்கம் 2021 இல் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதால், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் 81 கோடி பேருக்கு மட்டுமே உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகிறார்கள். 


"சாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது"


ஆனால், தற்போதைய மக்கள் தொகையை கணக்கில் எடுத்தால் 95 கோடி இந்தியர்கள், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளனர். இரண்டு வருடங்களாகியும் புதிய பயனாளிகள் சேர்க்கப்படாமல், மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன" என்றார்.


கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்களை மோடி அரசு நீக்கி வருவதாக குற்றஞ்சாட்டிய ஜெய்ராம் ரமேஷ், "ஒரு படி மேலே சென்று, பிகாரில் மாநில அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசு எதிர்த்து வருகிறது. 


அதிக எண்ணிக்கையில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களின் எண்ணிக்கையை கணிக்கிடாமல் அவர்களை வகைப்படுத்துவது, ஆய்வு செய்வது, அவர்களை முன்னேற்றுவது, அனைத்து இந்தியர்களுக்கும் சமூக நீதியை நிலைநாட்டுவது சாத்தியமற்ற ஒன்று. சாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது. சமத்துவக் கொள்கையில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.