சமீப காலமாகவே, எதிர்கட்சி மாநிலங்களுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் புது பிரச்னை வெடித்துள்ளது.


கர்நாடகா:


மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நிலத்தை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பெயரில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அவருக்கு கூடுதல் மதிப்புள்ள நிலம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில முதலமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.


சுதந்திர இந்திய வரலாற்றில் சிட்டிங் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதிப்பது என்பது அரிதிலும் அரிதான ஒன்று.  


கேரளா:


கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசு நியமித்திருந்தது. ஆனால், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தன்னுடைய பொறுப்பு என ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில், மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே பெரிய பிரச்சினை நிலவி வந்தது. 


அதன் உச்சக்கட்டமாக, தன்னுடைய பதவியின் கண்ணியத்தை குறைக்கும் அமைச்சர்கள், அவர்களின் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என பகீரங்க எச்சரிக்கை விடுத்தது சுதந்திர இந்திய வரலாற்றில் நடைபெறாத சம்பவமாக மாறியது. தற்போது, துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


தெலங்கானா:


மற்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை போலவே, தெலங்கானாவில் கே. சந்திரசேகர் ராவ் ஆட்சி காலத்தில், அப்போது ஆளுநராக பொறுப்பு வகித்த தமிழிசைக்கும் அவருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. அப்போது, சந்திரசேகர் ராவ் அரசாங்கத்தின் மீது தமிழிசை செளந்தரராஜன், குற்றச்சாட்டை சுமத்தி அரசியலில் புயலை கிளப்பி இருந்தார். தன்னுடைய போனை ஒட்டு கேட்பதாக அவர் கூறியிருந்தார்.


மேற்கு வங்கம்:


மற்ற மாநிலங்களை காட்டிலும் மேற்குவங்கத்தில்தான் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் பெரிய பிரச்னை நீடித்து வருகிறது. மேற்கு வங்க ஆளுநராக ஜக்தீப் தன்கர் பதவி வகித்தபோது, மம்தா பானர்ஜியும் அவரும் மோசமான உறவையே கொண்டிருந்தனர். ஆளுநருக்கு எதிராக புகார் கடிதங்கள் குடியரசு தலைவருக்கு சென்ற வண்ணம் இருந்தது.


கோப்புகளை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்ததாகவும் சாதாரண விவகாரங்களுக்கு எல்லாம் தலைமை செயலாளர், மாநில அரசின் மூத்த அதிகாரங்களை வரவழைத்து விளக்கம் கேட்டதாகவும் அப்போதையை ஆளுநர் தன்கருக்கு எதிராக மம்தா குற்றச்சாட்டு சுமத்தினார்.


தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், தன்கரை குடியரசு துணை தலைவராக்கியது பாஜக. பிரச்னை இதோடு முடியவில்லை. அவருக்கு பிறகு மேற்குவங்க ஆளுநரான சி.வி. ஆனந்த போஸூம், மம்தா அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.


தமிழ்நாடு:


தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் வெடித்த வருகிறது. திராவிட கொள்கை மீதான விமர்சனம் முதல் புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது வரை பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவி வருகிறது.


திராவிட மாடல் என்பது காலாவாதியான கொள்கை என்றும் அது பிரிவினைவாதத்தை தூண்டுவதாக உள்ளது என கூறி, திமுகவை தொடர்ந்து சீண்டி வருகிறார் ஆளுநர் ஆர். என். ரவி. ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.


யாருக்குதான் அதிகாரம்?


ஆளுநர், மாநில அரசுக்கு இடையே நடந்து வரும் அதிகார போட்டிக்கு உச்ச நீதிமன்றம் பல முறை தீர்வு கண்டுள்ளது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவது தொடங்கி ஆளுநரால் அமைச்சர் பதவி நீக்கம் செய்வது வரை பல விவகாரங்களில் மாநில அரசுக்கு ஆதரவாகவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


ஆளுநரின் ஆலோசனைகளை ஏற்று கொள்வதும் ஏற்று கொள்ளாமல் இருப்பதும் சட்டப்பேரவையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது" என இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.