சுஷில் ஹரி பள்ளி மாணவர்களிடம் பாலியல் வன்முறைக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் அந்தப் பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாகவும் அதனால் தன்னால் பாலியல் குற்றத்தில் ஈடுபட முடியாது எனவும் சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.பாலியல் குற்ற வழக்குகளில் மாட்டும் சாமியார்கள் தனக்கு ஆண்மை இல்லை எனக் காரணம் சொல்லி வழக்குகளில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது இது முதன்முறை அல்ல.
நித்யானந்தா
கைலாசா நித்யானந்தா பிரபல நடிகை ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய போது தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அவர் சொன்ன முதல் காரணம் தனக்கு ஆண்மை இல்லை என்பதுதான். ஒருபடி மேலே போய் தான் ஆணே இல்லை என்றும் தனக்குப் பாலினமே இல்லை என்றும் பிதற்றினார் நித்தி. மேலும் தான் சவாசனம் என்னும் யோகாசனத்தில் ஈடுபட்டிருந்ததாக அப்போது நம்பமுடியாத காரணத்தைக் கூறினார். வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை சென்றது. பின்னர் காவல்துறையின் பரிசோதனையில் அவர் சொன்னது பொய் என்று உறுதியானது.
ஆசாராம் பாபு
சர்வதேச அளவில் 400 ஆசிரமங்கள், அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, திக் விஜய் சிங் எனக் கட்சிப் பாகுபாடில்லாமல் பக்தர்கள், 40 மில்லியன் பாலோயர்கள் என ஸ்டார் சாமியாராக வளம் வந்த 80 வயது ஆசாராம் பாபு மீது 16 வயதுச் சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 2013ல் புகார் அளிக்கப்பட்டது. தான் வயதானவன் தனக்கு ஆண்மையில்லை என மற்ற சாமியார்களைப் போலவே ‛அதே டெய்லர் அதே வாடகை’ ரகக் காரணத்தைக் கூறினார் ஆசாராம். அவரது காரணத்தைப் பொய்யென்று நிரூபித்தனர் போலீசார்.தற்போது ஜோத்பூர் சிறையில் தன் இறுதிநாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார் இந்த ஆசாராம்.
எம்.எஸ்.ஜி.,
பஞ்சாப்பின் விநோத சாமியார் எம்.எஸ்.ஜி.யின் விவகாரமே முற்றிலும் வேறானது. பிறந்தது பஞ்சாப் மாநிலம். தனது 23 வயதில் தன்னை சாமியாராக அறிவித்துக்கொண்ட நபர். பெண் சீடர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார்.இன்னும் அதிர வைக்கும் ரகமாகத் தன் க்ரூப்பில் இருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மடத்தை விட்டு வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஆண்மையை நீக்கித் தன்னுடனே வைத்துக்கொண்டார் என்பதுதான். இவரைக் கைது செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குர்மீத் ராம் ரஹீம் சொன்ன காரணமும் தனக்கு ஆண்மை இல்லை என்பதுதான். ’ஆண்மை இல்லையென்றால் உங்களுக்கு இரண்டு மகள்கள் எப்படிப் பிறந்தார்கள்?’ எனக் கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.
இதுதவிர வளர்ப்புப் பெண்ணிடமே பாலியல் ரீதியான உறவு, இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளரின் படுகொலை, அதற்கு உதவிய தனது மேனேஜரையே போட்டுத்தள்ளியது என இவர் மீதான அடுக்கடுக்கான குற்றத்தால் அறண்ட பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.