காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். டுவிட்டரின் விதிகளை மீறியதாக ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. பின்னர், அவரது கணக்கும் மீண்டும் செயல்பட தொடங்கியது.


ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆந்திராவில் முன்னாள் எம்.பி. ஹர்ஷாகுமாரின் மகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான ஸ்ரீராஜ் ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதை கண்டித்து டுவிட்டரின் சின்னமான குருவியை எண்ணெயில் பொறித்து தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதற்காக, அவர் காடை பறவையை எண்ணெயில் பொறித்து டெல்லியில் உள்ள டுவிட்டர் தலைமையகத்திற்கு அதை பார்சல் அனுப்பினார். அவரது செயல் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. ஆனால், காடையை எண்ணெயில் பொறித்ததற்காக அவரை கட்சியில் இருந்து கடந்த 20-ந் தேதி நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது.




இந்த நிலையில், ஸ்ரீராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில், “ நாங்கள் டுவிட்டர் குருவியை வறுத்தோம். ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கை முடக்கியதற்காக டுவிட்டர் குருவியை வறுத்தோம். பின்னர், அதை டெல்லி தலைமையகத்திற்கு அனுப்பினோம். இந்த குருவி உள்ளூரில் உள்ள சுவையகத்தில் எளிதாகவே கிடைக்கிறது. நான் சட்டப்படியே உள்ளூரில் உள்ள சந்தையில் இந்த காடையை வாங்கினேன்.


எண்ணெயில் காடையை வறுத்து போராட்டத்தில் ஈடுபட்டது எந்தவிதமான வன்முறையையும் தூண்டவோ அல்லது எந்தவிதமான விலங்கு கொடுமையையும் தூண்டவோ இல்லை. காடை வறுவல் ஆந்திராவில் பிரதான உணவு ஆகும். மேலும், நாட்டில் பல பகுதிகளிலும் காடை வறுவல் உணவு உள்ளது.




என்னை கட்சியில் இருந்து நீக்கியதால் நான் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளேன். மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். இந்த வீடியோவை முழுமையாக காண வேண்டும். ஒருவேளை நான் தவறு செய்ததாக நீங்கள் எண்ணினால், இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.”


இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.


மேலும், ஸ்ரீராஜ் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவர் என்னை அழைத்து நான் செய்தது தவறு என்று கூறினார். நான் பறவையை கொதிக்கும் எண்ணெயில் வீசவில்லை. அந்த காடை உயிருள்ள பறவையல்ல. அது இறந்துபோன காடை பறவைதான் என்று விளக்கம் அளித்தேன். ஆனாலும், என்னுடைய விளக்கத்தை ஏற்காத அவர் என்மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இந்த செயலுக்கு விளக்கம் கேட்டு எனக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றுதான் நான் கருதினேன். ஆனால், என்னை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளனர் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.