நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், குஜராத் ராஜ்கோட் பகுதியில் கொரோனா தடுப்பு மருந்தை நிர்கவகித்துக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி பரிசாக வழங்க ராஜ்கோட் பகுதி பொற்கொல்லர் அமைப்பு முடிவு செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதி கிராம மக்கள் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அக்கிராம மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தடுப்பு மருந்தை நிர்வகித்துக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு Hand Blender போன்ற பொருட்களை இலவசமாக வழங்க அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் அமைப்புகள் முன்வந்துள்ளனர். இந்த முயற்சி மக்களிடத்தில் காணப்படும் அச்சங்களை போக்குமா? தங்க மூக்குத்தி விழிப்புணர்வு அம்சமாக மாறுமா? என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்டவ அனைவருக்கும் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கொவிட் தடுப்பூசி போடுப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே அறிவித்தது. நாடு முழுவதும் 7,59,79,651 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவற்றில் முதல் டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6.5 கோடி (6,57,39,470). 2வது டோஸ் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியை (1,02,40,181) கடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கொவிட்-19 பெருந்தொற்றின் நிலை மற்றும் இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்த தினசரி ஆய்வை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பின்னூட்டமாக பகிர்ந்து கொண்டு, அதற்கேற்ப சரியான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
கொவிட் தடுப்பூசிகளின் ஆராய்ச்சி, மேம்பாடு, தற்போதுள்ள தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தித் திறன், பரிசோதனைகளில் உள்ள தடுப்பூசிகளின் திறன் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தடுப்பூசித் தயாரிப்பாளர்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதிகரித்து வரும் உள்நாட்டு தேவைக்கேற்ற வகையிலும், அதேபோல் ‘உலகமே ஒரு குடும்பம்' என்ற உணர்வுடன் இதர நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், போதிய அளவு தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இந்த கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டது.