ஒடிசா மாநிலத்தில் கேந்திரபாரா மாவட்டத்தில் வரதட்சணை காரணமா 24 வயது பெண் ஒருவரை மாப்பிள்ளை வீட்டார் நிர்வாணப் படுத்தியிருக்கும் செயல் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து சிறப்பு காவல்படை அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


பெண்ணின் தாய் மாமா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக நிகிராய் காவல் நிலைய ஆய்வாளர் காபுலி பாரிக் தெரிவித்தார் .


மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில்," பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பெற்றுள்ளோம். வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையை தொடர்ந்து அனுபவித்து வந்திருக்கிறார். கோரக் கிராமத்தில் உள்ள சில உள்ளூர்வாசிகள் பெண்ணை மீட்க முன்வந்தனர்" என்று தெரிவித்தார்.  


மாப்பிள்ளை வீட்டார்கள் தற்போது கிராமத்தை விட்டு தலைமறைவாக இருப்பதாகவும், குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் படை  அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 


2018க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 7166 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள், 1965 குடும்ப வன் முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


பெண் சிசுக் கொலையைத் தடுப்பது, வரதட்சணையை ஒழிப்பது,  ஆகியவை தொடர்பான சட்டங்கள் மிகக் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தை உள்ளது.