அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. 


இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 


இஸ்ரேல் தொடுத்து வரும் போரால் திக்குமுக்காடிய காசா:


காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 2,000 குழந்தைகள் 1,100 பெண்கள் உள்பட 5000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு புறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மேற்குலக நாட்டின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு சென்று அந்நாட்டுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஜெருசலேம் சென்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர், இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


அப்போது பேசிய இம்மானுவேல் மேக்ரான், "ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராகப் போராடும் சர்வதேச நாடுகளின் கூட்டணியை விரிவுப்படுத்த வேண்டும். காசாவில் பாலஸ்தீன அமைப்பான ஹமாஸுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச கூட்டணி இணைய வேண்டும்.


இஸ்ரேலுக்கு தோளோடு தோள் கொடுத்த பிரான்ஸ் அதிபர்:


பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல், பயங்கரவாதத்தை தங்களின் பொது எதிரியாக கொண்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சர்வதேச கூட்டணி இயங்குவது போல், ஹமாஸுக்கு எதிராக செயல்பட பிரான்ஸ் தயாராக உள்ளது" என்றார்.


பிராந்திய மோதல் வெடிக்கும் என எச்சரித்த பிரான்ஸ் அதிபர், "ஹமாஸுக்கு எதிரான போர், எந்த வித இரக்கமும் இன்றி இருக்க வேண்டும். ஆனால், விதிகள் இல்லாமல் இருந்துவிடக்கூடாது" என்றார்.


செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக பிடித்தவைக்கப்பட்டர்களின் குடும்பத்தினரை இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசினார்.


ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் இயங்கி வரும் சர்வதேச கூட்டணிக்கு அமெரிக்கா தலைமை தாங்கி வருகிறது. இந்த சர்வதேச கூட்டமைப்பில் இஸ்ரேல் இடம்பெறாத போதிலும், இஸ்ரேலுக்கு எதிரான போரில் இந்த நாடுகள் எப்படி தலையிட முடியும் என்ற கேள்வி எழுகிறது.