நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக கேள்விகளை எழுப்பி, திக்குமுக்காட வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  


தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதானி குழுமத்துக்கு எதிராக கேள்விகளை கேட்பதற்காக தன்னிடம் ஆடம்பர பொருள்களை வாங்கி கொள்வார் என்றும் விடுமுறை நாள்களில் வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்வதற்காக உதவி கேட்பார் என்றும் மொய்த்ராவுக்கு எதிராக அவர் பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.


ஆடம்பர பொருள்களை லஞ்சமாக வாங்கினாரா மொய்த்ரா?


தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள மொய்த்ரா, தர்ஷன் ஹிராநந்தனியை கட்டாயப்படுத்தி புகார் கடிதத்தில் கையெழுத்திட வைத்ததாக பதில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக மொய்த்ரா கூறியதற்கு, 
தர்ஷன் ஹிராநந்தனி, எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தார்.


அவர் அமைதி காத்து வந்தது பல சந்தேகங்களுக்கு வழி வகுத்து வந்த நிலையில், தற்போது மெளனம் கலைத்துள்ளார். எந்த வித அழுத்தமும் தனக்கு கொடுக்கப்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினருக்கு அளிக்கப்படும் ஐடியை மொய்த்ரா தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பிரதமர் மோடி, அதானிக்கு எதிரான கேள்விகளை அதன் வழியாக தான் அனுப்பியதாகவும் தர்ஷன் ஹிராநந்தனி முன்னதாக குற்றஞ்சாட்டியிருந்தார். தனியார் செய்தி நிறுவனத்துடனான பேட்டியில் இதுபற்றி பேசுகையில், "மொய்த்ராவின் லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை துபாயில் இருந்து பயன்படுத்தினேன்" என்றார்


மெளனம் கலைத்த தொழிலதிபர்:


மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்து கேள்வி கேக்க வைத்தது குறித்து பேசிய அவர், "பைத்தியக்கரத்தனமாக நடந்து கொண்டேன். தற்போது, அதை நினைத்து வருந்துகிறேன். என்னை நேரடியாகவும், எனது நிறுவனத்தை மறைமுகமாகவும் சங்கடப்படுத்திவிட்டேன். இதை வெளியே சொல்வது என் கடமை. எந்தவொரு குற்றச்சாட்டிலும் உண்மையைக் வெளி கொண்டு வர வேண்டும். அதைத்தான் நான் இந்த வழக்கில் செய்துள்ளேன். சிபிஐ மற்றும் நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவுக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன்" என்றார்.


மொய்த்ரா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், விதிகளை மீறியதாக அவர் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம்.


இதற்கிடையே, மஹுவா மொய்த்ரா, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துப, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார். மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராயே, இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபவிடம் வழங்கியிருக்கிறார். ஆதாரங்களை வழங்கியது மட்டும் இன்றி, சிபியிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.