193 உறுப்பு நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஆறு உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் விளங்குகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலக நாடுகள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. 


ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்:


முன்னதாக, லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற பெயரில் இருந்த இந்த அமைப்பு அதன் நோக்கங்களை அடையத் தவறியதால், இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சில் என்ற பெயரில் புதிய அமைப்பு நிறுவப்பட்டது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளை மேம்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.


ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய நாடுகள் இருக்கின்றன. அல்பேனியா, பிரேசில், காபோன், கானா, இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.


நிரந்தர உறுப்பினர்:


இதில், நிரந்தர பிரதிநிதியாக ஆக இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக மாற்ற பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து பிரான்ஸ் நாட்டிற்கான ஐநாவின் துணை நிரந்தர பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் நேற்று கூறுகையில், "பிரான்சின் நிலைபாடு நிலையானது. நன்கு அறியப்பட்ட ஒன்று. சபை அதன் அதிகாரத்தையும் செயல்திறனையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்றைய உலகின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.


 






பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது, பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான பிற விஷயங்களில் சமமான பிரதிநிதித்துவம் அளிப்பது தொடர்பாக ஐநா பொதுச் சபையின் கூட்டத்தில் பேசிய அவர், "பாதுகாப்புச் சபையில் நிரந்தர இருப்புக்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கும் புதிய சக்திகளின் விருப்பத்தை நாம் உண்மையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


நிரந்தர உறுப்பினர்களாக ஜெர்மனி, பிரேசில், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தேர்வை பிரான்ஸ் ஆதரிக்கிறது. நிரந்தர உறுப்பினர்கள் உட்பட ஆப்பிரிக்க நாடுகளின் வலுவான இருப்பைக் காண விரும்புகிறோம். சமமான புவியியல் பிரதிநிதித்துவத்தை அடைய மீதமுள்ள இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்" என்றார்.


நிரந்தர பிரதிநிதியாக இந்தியா வர வேண்டும் என்றால் மற்ற நிரந்தர உறுப்பினர்கள் அனைத்தும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால், சீனா, இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.