உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
காசி தமிழ் சங்கம் :
உத்தர பிரதேசம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து பல குழுக்களாக பாரம்பரிய கலைஞர்கள் உத்தரபிரதேசம் சென்றுள்ளனர்.
பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெற்ற வருகிறது.
பிரதமர் பங்கேற்பு :
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இளையராஜா வியப்பு :
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய இளையராஜா, "காசி நகருக்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை இங்கிருப்பவர்கள் அனைவரும் விளக்கி பேசினர். பாரதியார், இங்கு இரண்டு ஆண்டுகள் படித்திருக்கிறார். காசியில் கேட்க ஒரு கருவி செய்வோம் என்ற பாடலை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காலத்தில் பாடி உள்ளார். இங்கு படித்துதான் அவர் அறிவு பெற்றிருக்கிறார்.
பெருமை மிக காசி நகரத்தில் தமிழ் சங்கத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் நமது பிரதமருக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்தேன். என் உணர்வுகளை என்னால் முழுவதும் வெளிபடுத்த முடியவில்லை" என்றார்.
சமீப காலமாக, தமிழ்நாட்டின் பெருமை குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழின் பெருமை குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு முன்னதாக வருகை தந்த அமித்ஷா, "உலகத்தின் தொன்மையான, பழமையான மொழி நம் தாய் மொழி தமிழ்தான். தமிழின் தொன்மையை பறைசாற்றுவது தமிழர்களின் கடமை அல்ல, இந்தியர்களின் கடமை” எனத் தெரிவித்திருந்தார்.
முக்கிய நிகழ்வுகள் :
தமிழ் மொழி குறித்த பரப்புரையில் பாஜகவினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு பாஜகவின் அரசியல் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.