Vande Bharat Rail: ஜூலை மாதம் மட்டும் 4 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வந்தே பாரத் ரயில்
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழில்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே இந்திய ரயில்வே இலக்கு வைத்துள்ளது. அதனால் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது.
இந்த மாதம் எத்தனை ரயில்கள்?
இந்நிலையில், ரயில்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதம் நான்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை - திருநெல்வேலி, டெல்லி - சண்டிகர், குவாலியர் - போபோல் மற்றும் லக்னோ - பிரயாக்ராஜ் ஆகிய வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
சென்னை - நெல்லை
இவற்றில் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. இது சுமார் 622 கி.மீ இடைவெளிக் கொண்ட வழித்தடம் ஆகும். 8 பெட்டிகளை கொண்டாக இயக்கப்படும் இந்த ரயிலில் ஒரு பெட்டி முழுவதும் விஐபிகளுக்காகவும், பிற பெட்டிகளில் ஒரு பக்கம் 3 சீட்களும், மற்றொரு பக்கம் 2 சீட்களும் அமைக்கப்பட உள்ளது.
மேலும், நெல்லையில் இருந்து காலை 6 மணி அளவில் புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 முதல் 2.30 மணிக்குள் சென்னை வந்தடையும் என்றும் சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் நெல்லைக்கு வந்தடையும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரயில்கள் 10 மணி நேரத்திற்கு மேலாகிறது. ஆனால் வந்தே பாரத் ரயிலில் பயணித்தால் 2 அல்லது இரண்டரை மணி நேரம் மிச்சமாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில், பயணிகள் வருகை 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் வந்தே பாரத் வழித்தடம் மற்றும் பெட்டிகளில் அதிகபட்சம் 25 சதவீத கட்டண சலுகையை இந்திய ரயில்வே அறிவிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க