மனைவியும், மகனும் உணவு தராமல் தன்னை பட்டினி போட்டதாக ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தனக்கு மாதம் ரூ. 5 லட்சம் வீதம் ஜீவனாம்சம் வழங்க மனைவி, மகனும் உத்தரவிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலோட் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் விஸ்வேந்திர சிங் என்பது குறிப்பிடத்தக்கது. 


என்ன நடந்தது..? 


ராஜஸ்தானின் முன்னாள் அமைச்சரும், பரத்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவருமான விஸ்வேந்திர சிங், தன்னை சித்ரவதை செய்ததாகவும், போதிய உணவு கொடுக்காமல் வீட்டி இருந்து வெளியேற்றியதாக தனது மனைவி மற்றும் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 


சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில், விஸ்வேந்திர சிங் தனது மனைவி திவ்யா சிங் மற்றும் மகன் அனிருத் சிங் தனக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் கீழ் புகார் அளித்துள்ளார். 


இதுகுறித்து, ராஜஸ்தானின் முன்னாள் அமைச்சர் விஸ்வேந்திர சிங் அளித்த புகாரில், ” 62 வயதான எனக்கு இதய நோய் பிரச்சனை இருக்கிறது,, மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. கடந்த 2021 மற்றும் 2022ல் தனக்கு இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், என்னை எனது மனைவியும் மனைவி கவனிக்கவில்லை. 


கடந்த சில ஆண்டுகளாக எனது மனைவியும்  மகனும் எனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். என்னை தாக்குகிறார்கள், எனது ஆவணங்கள் மற்றும் ஆடைகளை எரித்தனர். மேலும், உணவை தராமல், என்னை தகாத வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். என்னை யாரையும் சந்திக்கவிடவில்லை. என்னை அரண்மனைக்குள் நீண்ட காலமாக சித்திரவதை செய்தனர். இறுதியில் என்னை வீட்டை விட்டு வெளியேற்றினர். இதன் காரணமாக நான் பல ஆண்டுகளாக வேறு இடத்தில் வசித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


மேலும், “ அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து, நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். தொடக்கத்தில், ஜெய்ப்பூரில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கினேன். பின்னர், ஹோட்டல்களில் தங்கினேன். அரண்மனைக்கு செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். 


இதன் காரணமாக தனது மனைவி மற்றும் மகனிடம் இருந்து மாதம் ரூ. 5 லட்சம் ஜீவனாம்ச தொகையும், அரண்மனையின் உரிமை மற்றும் அனைத்து சொத்துக்களும் தனக்கு மாற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். 


இதையொட்டி, பரத்பூர் முன்னாள் எம்.பியான திவ்யா சிங் மற்றும் அவரது மகன் அனிருத் சிங்கும் விளக்கமளித்துள்ளனர். அதில், விஸ்வேந்திர சிங் அவரது மூதாதையர் சொத்துகளை விற்க முயன்றதாகவும், அதை தடுக்க குற்றத்திற்காக தங்கள் நற்பெயருக்கு களங்க ஏற்படுத்தியாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து திவ்யா சிங் கூறுகையில்,” விஸ்வேந்திர சிங், மோதி மஹால் அரண்மனையை விற்க முயன்றதால் குடும்ப தகராறு அதிகரித்தது. எங்கள் சொத்துக்களை பாதுகாக்க நானும், என் மகனும் முயன்றதால் இப்படியான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்” என தெரிவித்தார். 


அதேபோல், அனிருத் சிங், தனது தந்தை மார்ச் மாதம் நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்ததாகவும், அவரது குற்றச்சாட்டுகள் தவறானவை என்று நிராகரித்ததாகவும் கூறினார்.