முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமான நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை 8 மணிக்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த மன்மோகன் சிங்?
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இதன்மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பின் அதிக நாட்கள் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும் இவர் தான் இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பிரதமராவார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங் 1966 முதல் 1969 ஆம் ஆண்டு வரை ஐநாவில் பணியாற்றினார்.
பின்னர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் லலித் நாராயண் மிஸ்ரா அவரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் ஆலோசகராக நியமித்தார்.
நடந்தது என்ன?
மத்திய அரசில் தலைமை பொருளாதாரா ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்டக்குழு தலைவர் என பல முக்கிய பதவிகளை வகித்த மன்மோகன் சிங் 1991 ஆம் ஆண்டி பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவியேற்றார். அப்போது இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது.
பொருளாதார துறையில் சிறந்து விளங்கிய மன்மோகன் சிங் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு சீர்திருந்தங்களை உண்டாக்கினார். மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது.
மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்துடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் 8-9% பொருளாதார வளர்ச்சி விகித்தை அடைந்தது. 2007 இல், இந்தியா அதன் அதிகபட்ச GDP வளர்ச்சி விகிதமான 9% ஐ அடைந்தது. உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியது.
இதையும் படிக்க: அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!