அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளித்ததன் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே குற்ற சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், யாருமே புகார் அளிக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றில் அவலம்!
தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். தலைநகர் சென்னையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் போட்டாபோட்டி போடுவர்.
அத்தகைய பெருமை வாய்ந்த பல்கலை. வளாகத்திலேயே முன்பின் தெரியாத நபர் ஒருவரால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதுவும் காதலருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரை விரட்டிவிட்டு ஞானசேகரன் என்பவர் இத்தகைய கோர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஞானசேகரன் கைது; திமுக நிர்வாகியா?
மாணவி தைரியமாக புகார் அளித்ததன் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரன் ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் நிற்கும் புகைப்படத்தையும், உதயநிதி ஸ்டாலின் அருகில் நிற்கும் புகைப்படத்தையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே குற்ற சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன.
இச்சைக்கு இணங்காவிட்டால்...
அதில், நண்பருடன் தனியாக அந்த மாணவி இருந்ததை ஞானசேகரன் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதை மாணவியிடம் காண்பித்து, ’’என்னுடைய இச்சைக்கு இணங்காவிட்டால், இதை கல்லூரி டீன், பேராசிரியர்களிடம் காண்பித்து கல்லூரியை விட்டே வெளியேற்ற வைப்பேன்’’ என்று மிரட்டியுள்ளார்.
போதாததற்கு ’’மாணவியின் தந்தை எண்ணை செல்போனில் இருந்து எடுத்து, தந்தைக்கே அந்த வீடியோவை அனுப்பி வைப்பேன்’’ என்றும் ’’சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’’ என்றும் மிரட்டி உள்ளார்.
மாணவியும் மாணவரும் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல், மாணவரை விரட்டிவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இனி யாருமே புகார் அளிக்கக் கூடாதா?
அதே நேரத்தில், மாணவியின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகி உள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருங்காலத்தில் இனி யாருமே புகார் அளிக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.