நாட்டின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆட்சிக்காலத்தில் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் சாந்தி பூஷண். இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களான ஜெயந்த் பூஷண் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோரின் தந்தையும் இவர் ஆவார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி பூஷண் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 97.


இந்திராகாந்திக்கு எதிரான வழக்கு:


இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜ்நரேன் தொடுத்த வழக்கில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ஆஜராகி  வெற்றி பெற்றவர் சாந்தி பூஷண். இந்தியாவின் சுதந்திர போராட்ட தியாகியும், அரசியல்வாதியுமானவர் ராஜ் நரேன்.




இவர் 1971ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ராய்பரேலி தொகுதியில் இந்திராகாந்திக்கு எதிராக ராஜ்நரேன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். ஆனால், இந்திரா காந்தி தேர்தல் ஊழல் செய்துதான் வெற்றி பெற்றார் என்று ராஜ்நரேன் அலகாபாத் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார்.


இந்தியாவே திரும்பி பார்த்த வழக்கு:


அந்த வழக்கில் அவருக்காக ஆஜராகிய அப்போதைய இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்தான் சாந்தி பூஷண். அவரது அபாரமான வாதத்திறமையால் 1975ம் ஆண்டு நீதிமன்றம் இந்திராகாந்தி அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. அப்போது அவர் நாட்டின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்திராகாந்தி வழக்குத் தொடர்ந்தார். இந்த தொடர் சம்பவங்களுக்கு பிறகு 1975ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அவசர நிலையை இந்திராகாந்தி பிரகடனம் செய்தார்.




இந்தியாவின் முன்னணி வழக்கறிஞராக வலம் வந்த சாந்திபூஷண் 1977ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை நாட்டின் மத்திய சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். நீதித்துறையில் ஊழல் நடந்துள்ளதாக 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் பரபரப்பு குற்றச்சாட்டை சாந்தி பூஷண் கூறினார். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனாலும், அவர் தன்னுடைய குற்றச்சாட்டில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தார். மேலும், இந்த குற்றத்திற்காக சிறை செல்லவும் தயாராக இருப்பதாக கூறினார்.


பிரதமர் இரங்கல்:


இந்திராவுக்கு எதிரான காங்கிரஸ் தரப்பில் உறுப்பினராக இருந்தவர் பின்னர் ஜனதா கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். பின்னர், ராஜ்ய சபா உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். பா.ஜ.க.வில் 6 ஆண்டுகள் இருந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்திராகாந்தி வழக்கில் ஆஜராகி அவரையே தோற்கடித்த சாந்தி பூஷண் மறைவுக்கு வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.