தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அவற்றை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு
ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் ஜி 20 உறுப்பு நாடுகளின் உள்ள கல்வி நிறுவனங்கள் இடையே சாத்தியமான ஆராய்ச்சி, கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கருப்பொருள்களை கண்டறியும் நோக்கத்துடன் "கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு" என்கிற கருத்தரங்கு சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் இன்று தொடங்கியது. சென்னையில் பிப்ரவரி 1, 2 தேதிகளில் ஜி20 முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் வங்கதேசம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, நெதர்லாந்து, நைஜீரியா உள்ளிட்ட ஒன்பது உறுப்பு நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வையொட்டி சென்னை ஐஐடியின் ஆராய்ச்சிப் பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஜி 20 கல்வியாளர்கள் நேரில் பார்வையிடுகின்றனர். அடுத்த இரண்டு நாட்கள் இந்திய மற்றும் உலகளாவிய கல்வி தொடர்பான கருத்தரங்கம் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்திற்கு ஜி-20 பிரதிநிதிகள் கல்வியாளர்கள் சுற்றுலா செல்ல உள்ளனர். ஜி-20 கல்வி கருத்தரங்கம் நடைபெறுவதையொட்டி சென்னை ஐஐடி சுற்றியுள்ள பகுதிகளிலும், ஜி 20 தங்கும் விடுதிகளில் பலத்த போலீஸ்க்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்
இந்நிலையில், ஜி20 நாடுகளின் கல்வி கருத்தரங்கிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து விதமான தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அவற்றை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் கொரோனாவுக்குப் பிறகு அதிகரித்து வரும் இடைநிற்றலை அதிகரித்து வருகிறது. அதனை குறைப்பதற்காகவும், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்கான யோசனைகளை அனைத்து நாடுகளும் முன்வைத்ததாக குறிப்பிட்டார். அதேபோல் 10+2 என்ற தேர்வு முறையை மாற்றி, 5+3+3+4 என, அதாவது 3-8, 8-11, 11-14, 14-18 ஆகிய தேர்வு முறைகள் அடுத்த ஒன்றரை வருடத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என சஞ்சய் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து மாநில கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். அதாவது தேசிய கல்விக் கொள்கையில் உயிரோட்டமான பல விஷயங்கள் உள்ளதால் அதை நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறினார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டத்தையும் சஞ்சய் குமார் பாராட்டினார்.