தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதிலிருந்து ஒரு நாட்டு பிரச்னை, உலக பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தலிபான்களின் கொள்கை குறித்த விவாதங்கள் தான் தற்போது பல்வேறு தரப்பின் கண்டனத்திற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில் அண்டைநாடான ஆப்கானில் ஏற்பட்டுள்ள இந்த சூழல் குறித்து தற்போது இந்தியாவின் தலைவர்களும் கருத்துக்களை பகிரத்துவங்கியுள்ளனர். அந்த வரிசையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் கருத்து தற்போது கட்சிகளிடையேயான விவாதமாக மாறியிருக்கிறது.
காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முக்தி, தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் நடந்த மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பல கருத்துக்களை தெரிவித்தார்.
‛தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் நுழைந்த வலிமையான அமெரிக்க படையை மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஓட ஓட விரட்டியுள்ளனர். உங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கிறது. அதற்குள் உங்கள் வழிமுறையை மாற்றிவிடுங்கள். வாஜ்பாய் போன்று காஷ்மீர் பிரச்னைக்கு பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். அரசியல் அமைப்புக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் காஷ்மீரில் அடையாளங்களை அழிப்பதை நிறுத்த வேண்டும். எங்களிடமிருந்து திருடியதை தர வேண்டும். காஷ்மீருக்கு முன்பு இருந்தது போல மீண்டும் மாநில அந்தஸ்து தர வேண்டும். அத்தோடு சிறப்பு அந்தஸ்தையும் உறுதிசெய்ய வேண்டும். எங்கள் பொறுமையை தொடர்ந்து சோதிக்காதீர்கள். அண்டை நாட்டில் நடப்பதை பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் எல்லாம் தாமதமாகிவிடும். அமெரிக்கா... தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு முன் இருந்த பாஜக அரசாக இருந்தாலும் சரி, வேறு கட்சியின் மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, முன்பு காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பாஜக இருக்கும் வரை ஜம்மு காஷ்மீர், தேசத்துடன் ஒன்றிணைய முடியாது. பொறுத்திருங்கள் நேரம் வரலாம். அவர்கள் நம் முன் மண்டியிட்டு நம் தேவையை கேட்கும் காலம் வரும், என்று பரபரப்பாக பேசினார்.
தலிபான்கள்-அமெரிக்க படையைஒப்பிட்டு மெகபூபா முக்தி பேசியிருப்பதற்கு ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‛‛பிரதமர் மோடியை மெகபூபா முக்தி குறைத்து மதிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தானில் படையை திரும்ப பெற்ற பைடன் போன்றவர் அல்ல மோடி... தலிபானோ, அல்கொய்தாவோ, லஷ்கர் இ தொய்பாவே, ஹிஸ்புல் அமைப்போ இந்தியாவுக்கு எதிராக சதி செய்பவர் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்க கூடியவர் மோடி. காஷ்மீரில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர், தோல்வியடைந்தவர் மெகபூபா முக்தி. ஆப்கானை அழித்த தலிபான்களை அவர்கள் புகழ்கிறார்,’’ என்று மெகபூபா முக்திக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதே போல் மெகபூபா முக்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.