கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்த அபிஜித் கங்கோபாத்யாய் அண்மையில் தனது பதிவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், காந்தியா? கோட்சேவா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் மழுப்பலான பதில் அளித்திருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாஜகவில் இணைந்த முன்னாள் நீதிபதியால் சர்ச்சை:
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வழக்கானது நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்.
மேலும் தொலைக்காட்சிகளில் நேரடியாகவும் மேற்குவங்க அரசை எதிர்மறையாக விமர்சித்து பேட்டியளித்தார். இதையடுத்து, நீதிபதியாக இருக்கும் நபர், இதுபோன்று பேட்டியளிக்க கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, திரிணாமுல் அரசுக்கும் முன்னாள் நீதிபதி அபிஜித்க்கும் முரண்பாடு எழ ஆரம்பித்தது.
இப்படிப்பட்ட சூழலில், நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் குதிக்கப்போவதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்தார். மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று பாஜகவில் இணைந்தார்.
காந்தியா? கோட்சேவா?
வரும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் அவர் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில், பாஜகவில் இணைவதற்கு ஒரு சில நாள் நாள்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. நமது ஏபிபி ஆனந்தா தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியின்போது, ராபிட் ஃபயர் கேள்வி பதில்களின்போது, காந்தியா? கோட்சேவா? என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, யோசித்து சொல்கிறேன் என மழுப்பலான பதில் அளித்தார்.
இதை கடுமையாக விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே, "உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் கடந்த திங்கள்கிழமை அன்று ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். நீதிபதியாக இருந்தபோது, பாஜக தன்னை அணுகியதாக அவர் கூறினார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இவரிடம் ராபிட் ஃபயர் கேள்விகள் எழுப்பப்பட்டது. காந்தியா அல்லது கோட்சேவா என கேட்டால், அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார் அவர். 4 நாட்களுக்கு முன்பு வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரால் காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையே வேறுபாடு காணமுடியவில்லை. இவர், நீதிமன்றத்தில் தனது தீர்ப்புகளை எப்படி வழங்கியிருப்பார். அவரது மனநிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.