கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா கட்சி விதிகளுக்கு உட்பட்டு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மனமின்றி அவர் ராஜினாமா செய்தாலும், ராஜினாமாவிற்கு முன்பாக "முதல்வர் பதவியில் இருந்து நான் விலகுவது துயரத்தால் அல்ல, இதை மகிழ்ச்சியாகவே செய்கிறேன்," என்றார்.
"மாநிலத்தில் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர்களின் விருப்பம் மற்றும் பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்," என்று எடியூரப்பா உணர்ச்சிபொங்க பேசியிருந்தார். இந்நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றார். அவருக்கு எடியூரப்பா வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடியூரப்பா, கட்சி உத்தரவைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்ததால், அவரை சமரசம் செய்ய விரும்பிய முதல்வர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவிற்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கி உத்தரவிட்டார். அதே உத்தரவில், எடியூரப்பா முதல்வராக இருந்த போது தங்கியிருந்த பெங்களூரு காவிரி இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் எடியூரப்பா அவற்றை ஏற்க மறுத்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது அவரது அதிருப்தியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.மேலும் அந்த கடிதத்தில் ‛முன்னாள் முதல்வருக்கான வசதிகள் எதுவோ... அதை மட்டும் செய்து கொடுத்தால் போதும் என்றும், மற்றபடி அமைச்சர் அந்தஸ்தோ, வேறு எந்த விதமான சலுகையோ எனக்கு வேண்டாம்,’ என- எடியூரப்பா தெரிவித்தார்.
அமைச்சர் அந்தஸ்தில் கிடைக்கும் சலுகைகள்!
- எடியூரப்பா அமைச்சர் அந்தஸ்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே காவிரி இல்லத்தில் வசிக்க முடியும்.
- மாத சம்பளம் தவிர ஆண்டுக்கு ரூ.3 லட்சம் ‛அலவன்ஸ்’ மற்றும் வீட்டு வாடகையாக மாதம் ரூ.1 லட்சம் பெறலாம்
- ஆண்டுக்கு 1000 லிட்டர் எரிபொருளை இலவசமாக பெறலாம்
- நாற்காலி, இருக்கைகள் வாங்க ரூ.10 லட்சம் கிடைக்கும்
- வாகனம் வாங்க ரூ.21 லட்சம் அரசு நிதி கிடைக்கும்
- வீடு மற்றும் அலுவலகத்தில் இலவச தொலைபேசி இணைப்பு வழங்கப்படும்
இந்த வசதிகளை தான் எடியூரப்பா தற்போது மறுத்துள்ளார். அதே நேரத்தில் எடியூரப்பாவிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ள அமைச்சர் அந்தஸ்து அரசு உத்தரவிற்கு கர்நாடகா காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்த சலுகைகளை ஏற்க மறுத்ததன் மூலம் எடியூரப்பா தனது மறைமுக அதிருப்தியை தெரிவித்துள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.