உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி  எஸ். ஏ. போப்டே நேற்று நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்  (ஆர்எஸ்எஸ்) மோகன் பகவத்தை சந்தித்ததார். இருப்பினும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மற்ற தலைவர்கள் இந்த  சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும், நம்பத்தகுந்த இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. நாக்பூரில் உள்ள  ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று மாலை 4 மணிமுதல் 5 மணிவரை இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும்  தெரிவித்துள்ளது. 


தலைமை அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் தலைவரை நீதிபதி பாப்டே சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவர் பூர்வீக வீட்டிற்குச் சென்றார் என்றும் கூறப்படுகிறது. எஸ்.ஏ.பாப்டே எனப்படும் சரத் அர்விந்த் பாப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1955-ம் ஆண்டு பிறந்தவர். இவரின் குடும்பம் வழக்கறிஞர்களால் நிரம்பியது. பாப்டேயின் தந்தை அர்விந்த் பாப்டே மகாராஷ்டிர மாநில அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.


மறைந்த, இவரின் அண்ணன் வினோத் அர்விந்த் பாப்டே, உச்ச நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். இவர், நான்காம் தலைமுறை வழக்கறிஞர். மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே, கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் 47 வது முன்னாள் தலைமை நீதிபதியாக பதிவி உயர்வு பெற்றார். 


தலைமை நீதிபதியாக இருந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டன. உதாரணமாக,  கொரோனா பெருந்தொற்று நோய்த் தாக்குதல், அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் காரணமாக  ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்க் கொண்டனர். இவர்களின் துயரங்களைப் போக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பாப்டே, அரசின் கொள்கை முடிவுகளில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கைவிரித்துவிட்டார். 




மேலும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பான்  தேச விரோத வழக்கின் கீழ்  ஆறு மாதங்களுக்கு முன் உத்தரப்பிரதேச காவல்துறை  கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது. அரசியலமைப்பு பிரிவு 32-ன் கீழ்,  சித்திக்கை விடுதலை செய்யக்கோரி கேரள பத்திரிகையாளர் சங்கம் ஆட்கொணர்வு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த எஸ்.ஏ பாப்டே, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார். மேலும், 32-ன் கீழ் உச்சநீதிமன்றத்தை அணுகும் உரிமையை  ஊக்கப்படுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டார். 


அடிப்படை உரிமைகளைச் செயல்படுத்துவதற்காக, உரிய நடவடிக்கை  மூலம் உச்சநீதிமன்றத்தை அணுகக் கோரும் உரிமைக்கு இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், பிரிவு 21-ன் கீழ், ஒருவரது உயிரோ உடல்சார் உரிமையோ, சட்ட நெறிமுறையின்றி பறிக்கப்படுதல் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய, இரண்டு வழக்கிலும் இந்த உரிமையை கேள்வி கேட்கும் விதமாக எஸ். ஏ. பாப்டேவின் தீர்ப்பு அமைந்தது. 




இவருக்கு முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தனது பணி ஓய்வுக்குப் பிறகு, ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதுவும், பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.   


Rafale | பிரெஞ்சு நீதிபதி முடுக்கிய ரஃபேல் விசாரணை : முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்னது என்ன?