West Bengal Train Accidernt: மேற்குவங்க ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேற்குவங்க ரயில் விபத்து:
ஒடிசாவில் பாலசோர் ரயில் விபத்து நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து, மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயிலில் மோதியதால் இந்தியா மற்றொரு பெரிய ரயில் விபத்தை எதிர்கொண்டது. ரங்கபாணி ரயில் நிலையம் அருகே காலை 8.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது, சரக்கு ரயிலில் மோதியதில் அதன் ஓட்டுநர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். விபத்தில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ரயில்வே துறையை நாசமாக்கிய மோடி - காங்கிரஸ்
காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி பிரமோத் திவாரி விபத்து பற்றி கூறுகையில், "ரயில்வே பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தவில்லை என்பதையே விபத்துகள் காட்டுகின்றன. தார்மீக அடிப்படையில் ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார். விபத்தில் காயமடைந்த பயணிகள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடி ரயில்வேயை சீரழித்து விட்டார் என்று குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பவன் கேரா பேசுகையில், “இந்த காட்சிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. கடந்த 7-8 ஆண்டுகளில் ரயில்வே எப்படி சீரழிந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. ரயில்வே தொடர்பாக விசித்திரமான கொள்கையை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக ரயில்வே பட்ஜெட் தனியாக இருந்தது, இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வந்தே பாரத் ரயில்களை இயக்குவதால் ரயில்வேயின் தரத்தை உயர்த்த முடியாது. பயணிகளின் நிலை ரயில்வேயின் மோசமான நிலையை நமக்கு காட்டுகிறது” என பேசியுள்ளார்.
மம்த பானர்ஜி ஆவேசம்:
விபத்து தொடர்பாக பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ரயில்வே துறை ஒட்டுமொத்தமாக அலட்சியமாக செயல்படுகிறது. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது பல விஷயங்களைத் தொடங்கினேன். ஆனால் அவர்கள் வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டும் விளம்பரம் செய்கிறார்கள். துரந்தோ எக்ஸ்பிரஸ் எங்கே? ராஜ்தானி எக்ஸ்பிரஸுக்குப் பிறகு, துரந்தோ அதிவேகமான ரயிலாக இருந்தது. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 2-3 பெரிய ரயில் விபத்துகளைப் பார்த்தேன். அதன் பிறகு விபத்துகளை தடுப்பதற்கான சாதனங்கள் நிறுவப்பட்டதன் விளைவாக ரயில்களின் மோதல் நிறுத்தப்பட்டது. ஆனால், இன்று ரயில்வேயில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ரயில்வே அமைச்சகத்தில் பல சிக்கல்கள் உள்ளன. தனி ரயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு, அந்த துறைக்கு இப்போது போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை” என ஆவேசமாக பேசியுள்ளார்.
விபத்துக்கு யார் பொறுப்பு?
ஆர்ஜேடி தலைவர் பாய் வீரேந்திரா பேசுகையில், "ரயில்வே துறையை தனியார் மயமாக்கிய நாட்டில் விபத்துகள் நிச்சயம் நடக்கும். முன்பு காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விபத்துகள் ஏற்படும் போது அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். இப்போது இவ்வளவு பெரிய விபத்துகளுக்குப் பிறகு எந்த அமைச்சரும் ராஜினாமா செய்வதில்லை. இந்த அரசாங்கத்தின் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த அரசாங்கமே இந்த விஷயங்களுக்கு பொறுப்பான ஒரு கும்பல்” என தெரிவித்துள்ளார்.