தொடர் தோல்வியை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி சட்டப்பேரவை தேர்தல் வரை பல்வேறு மோசமான தோல்விகளை அக்கட்சி சந்தித்தது.


எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? இந்த தேர்தலிலும் படுதோல்வியே மிஞ்சும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டாலும் அதை எல்லாம் பொய்யாக்கி 99 இடங்களை கைப்பற்றியது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் 44 தொகுதிகளிலும் 2019 மக்களவை  தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.


ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற 54 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால், கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கொடுக்கப்படாமல் இருந்தது. இச்சூழலில், இந்த தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பங்காற்றிய ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தயக்கம் காட்டும் ராகுல் காந்தி: ஆனால், கடந்த 2019 தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி, பெரிய பதவிகளை ஏற்பதில் தயக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஏற்க மறுத்து வருகிறார்.


இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "முடிவு எடுக்கப்படும்போது அவர் அதை அறிவிப்பார்" என்றார். மேலும், "எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க மறுக்கும்பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என கார்கே ஜோக் அடித்தார்.


ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும் அவரது தாயாருமான சோனியா காந்தி, இதுகுறித்து பேசி வருவதாக தகவலகள் வெளியாகி வருகின்றன. தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு பதில் வேறு ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.


குமாரி செல்ஜா, கௌரவ் கோகோய், மணீஷ் திவாரி ஆகிய மூத்த தலைவர்களில் ஒருவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது முக்கிய பதவிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்தை கொண்டுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகளையும் கூட்டணி கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாக உள்ளது


எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸே தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதை தவிர்த்து, சமாஜ்வாதி, திரிணாமுல், திமுக ஆகியவை கணிசமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.